ஹேக் செய்யப்பட்ட புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கு? ரூ.8 கோடி மாயம்? பரபரப்பு தகவல்
Government Dental College Cyberattack : புதுச்சேரியில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8 கோடி மாயமானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நவம்பர் 8 : புதுச்சேரியில் (Puducherry) உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8 கோடி மாயமானதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அரசு கருவூலத்தில் இருந்து வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பல் மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் ரூ.8 கோடி மாயம்
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லூரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.8 கோடி மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை திருடியிருக்கலாம் என கூறப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரியின் வங்கிக் கணக்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகை மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்.. 3 ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!




மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2 மாத ஊதியத்தை சேர்த்து வழங்குவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து கல்லூரியின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கல்லூரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2 மாதங்களாக ஊதியம் வங்கப்படாததால் சர்ச்சை
இது தொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்ட பணம் எந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது, அந்தக் கணக்கில் இருந்து வேறு கணக்குகளுக்குப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதா, அனுமதியின்றி இணையவழிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : கடலூரில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீர் உயிரிழப்பு.. கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை!
இதற்கிடையில் கல்லூரியில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் தற்போது ஊதியத்துக்காக கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கப்படுமா என்ற கவலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.