கடலூரில் ஆயிரக்கணக்கான கோழிகள் திடீர் உயிரிழப்பு.. கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை!
Cuddalore Poultry Crisis | கடலூரில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் திடீரென ஆயிரக்கணக்கான கோழிகள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர், நவம்பர் 04 : கடலூரில் (Cuddalore) சுமார் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்துள்ள நிலையில், கோழிகளின் திடீர் இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும் சூழலில் இந்த திடீர் சிக்கல், அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் இறந்த ஆயிரக்கணக்கான கோழிகள்
கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு, தியாகவல்லி, தம்மனாம்பேட்டை, ஆலப்பாக்கம், சீனுவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 11 கொழிப்பண்ணைகள் உள்ளன. இதில் தீபாவளி பண்டிகைக்கு என பிரத்யேகமாக 6 பண்ணைகளில் சுமார் ஆயிரக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அந்த கோழிகள் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்படவும் தயார் நிலையில் இருந்துள்ளன.
இதையும் படிங்க : காலை 6 முதல் 7… இரவு 7 முதல் 8 – தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு




ஒரே பண்ணையில் 5,000 கோழிகள் பலி
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் இடையே நிலவிய கடும் வெயில் என காலநிலை மாறி மாறி இருந்ததன் காரணமாக அந்த பண்ணையில் இருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நவம்பர் 02, 2026 அன்று சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் அடுத்து அடுத்து உயிரிழந்துள்ளன. இதனை கண்டு அந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : 20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை
ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள்
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேல் தலைமையில் உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று கோழிகளின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் இறந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து நாமக்கலில் உள்ள ஒரு ஆய்வு மையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதற்கிடையே இறந்த கோழிகளை ஆழமாக பள்ளம் தோண்டி பாதுகாப்பான முறையில் அதிகாரிகள் புதைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.