Tamil Nadu Weather forecast: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
Tamil Nadu weather today : தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பர் 4, 2026 இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, நவம்பர் 4 : மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 3, 2026 நேற்று அதிகாலை 03.30 மணி முதல் காலை 05.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெல்லூருக்கும் நர்சாப்பூருக்கும் இடையே ஒங்கோலுக்கு மிக அருகில் கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் தமிழக பகுதிகளின் மேலும், சுமார் 1.5 கிமீ உயரம் வரை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக நவம்பர் 4, 2026 இன்று தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 5, 2026 நாளை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க : 20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 7 பேர் விடுதலை




அதனைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 6, 2026 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 7 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தீபாவளியன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
குறிப்பாக தீபாவளி நாளான வருகிற நவம்பர் 8, 2026 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது, புத்தாடை அணிந்து உறவினர் வீடுகளுக்கு செல்வது வழக்கமாக கொண்டிருப்போம். இந்த நிலையில் தீபாவளி நாளான நவம்பர் 10, 2026 அன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழை தீபாவளி கொண்டாட்டத்தை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் நவம்பர் 9, 2026 வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் தீபாவளியை நம்பியிருக்கும் வியாபாரிகள் பாதிக்கக் கூடும்.
இதையும் படிக்க : 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை அதிரடி ரத்து – என்ன காரணம்?
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் 4, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.