AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி வேட்டை.. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 222 பேர் பிடிப்பு.. 36 பேர் கைது!!

Chennai police rowdy hunt: சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்கள் மற்றும் கொலைகளைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி ரவுடி வேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 222 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி வேட்டை.. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 222 பேர் பிடிப்பு.. 36 பேர் கைது!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 10 Nov 2026 12:05 PM IST

சென்னை, நவ.10: சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் அரங்கேறிய தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தன. சட்டம்-ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும், தொடர்ச்சியாக அரங்கேறிய கொலைச் சம்பவங்கள் பெரும் பேசும் பொருளாக மாறியதைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல் துறை தரப்பில் சமூக விரோதிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநகரில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் காவல்துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிக்க: தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சி நிறைவு.. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களும் நிர்வாக மாற்றங்களும்!!

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை:

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், ஏற்கெனவே காவல் நிலையங்களில் குற்றப் பின்னணி மற்றும் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 185 ரவுடிகள் உள்பட மொத்தம் 222 நபர்கள் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, 16 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட மொத்தம் 36 பேர் முறைப்படி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் தற்போதைய குற்றச் செயல்பாடுகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காவல் ஆணையரின் கடுமையான எச்சரிக்கை:

சமூகத்தில் சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது சட்டவிரோதக் குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு நபராக இருந்தாலும் அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த ரவுடி வேட்டை தற்காலிகமானது அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திடச் சிறப்புப் படைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “வரலாற்று சாதனைக்கு தயாராகும் தமிழ்நாடு!”.. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் ராக்கெட் லான்ச்!

காவல்துறையின் தொடர் கண்காணிப்புத் திட்டம்:

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் பொருட்டு, காவல் துறையினர் எவ்வித சமரசமும் இன்றி இந்த அதிரடி சோதனைகளையும் கண்காணிப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றும் புதிய குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கவும், ரவுடியிசத்தை ஒழிக்கவும் இது போன்ற தொடர் நடவடிக்கைகள் காவல்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us