தவெக அரசின் ஆறு மாத கால ஆட்சி நிறைவு.. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களும் நிர்வாக மாற்றங்களும்!!
CM Vijay 6 months governance: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் ஆறு மாத ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. அண்ணன் சீர் திட்டம், வெற்றி வீடு, மகளிருக்கான விடியல் பயணம் விரிவாக்கம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களுடன் அரசு தனது முதல் ஆறு மாதங்களைக் கடந்துள்ளது.
சென்னை, நவ.10: திரைத்துறையில் இருந்து விலகி நேரடி அரசியலில் களமிறங்கி மாபெரும் வெற்றியைப் பெற்று தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தற்போது தனது வெற்றிகரமான முதல் ஆறு மாத கால ஆட்சியை நிறைவு செய்துள்ளது. பல்வேறு சவால்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே பொறுப்பேற்ற இந்த புதிய அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையிலும் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இளைஞர்களின் நலன், மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து புதிய திட்டங்களுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: “வரலாற்று சாதனைக்கு தயாராகும் தமிழ்நாடு!”.. குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு முதல் ராக்கெட் லான்ச்!
நிர்வாகச் சீர்திருத்தமும், டெண்டர் ரத்தும்:
ஆட்சிப் பொறுப்பேற்ற முதற்கட்டத்திலேயே நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்குப் புதிய அரசு அதிக முக்கியத்துவம் அளித்தது. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய மூன்று மாத காலத்திற்குள் அவசரமாகப் போடப்பட்டிருந்த 2000-க்கும் மேற்பட்ட டெண்டர்கள், பொது வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பொதுப்பணித்துறை டெண்டர்களில் ஊழல் புகார்களைத் தவிர்க்கும் பொருட்டு முறையான வெளிப்படைத்தன்மைக்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய அரசின் சில சர்ச்சைக்குரிய திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நிதி பற்றாக்குறை மற்றும் முந்தைய கடன்களின் சவால்களையும் மீறி அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைட்டுைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மகளிர் நலம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்:
பெண்களின் மேம்பாடு மற்றும் குடும்ப நலனை மையமாகக் கொண்டு பல்வேறு புதிய நலத்திட்டங்கள் இந்த ஆறு மாத காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் ‘அண்ணன் சீர் திட்டம்’ மூலம் 8 கிராம் தங்க நாணயமும் பட்டாசுப் பரிசுகளும் வழங்க ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமன் முறையில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை மேம்படுத்தும் நோக்கில் முந்தைய விடியல் பயணம் திட்டம் ‘மகள் வெற்றி பயணம்’ எனப் பெயரிடப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், வீட்டுவசதித் திட்டங்கள்:
மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, பெருந்தலைவர் காமராஜர் பெயரிலான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு இதற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பெருக்குவதற்காக ‘வெற்றி திறன் பயிற்சித் திட்டம்’ தொடங்கப்பட்டு 13 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் நோக்கில் ரூ.3,500 கோடி செலவில் ‘வெற்றி வீடு திட்டம்’ அறிவிக்கப்பட்டு 5 லட்சம் வீடுகள் கட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தொடர் சர்ச்சைகளில் சிக்கும் தவெக எம்எல்ஏ-க்கள்.. முதல்வர் தலைமையில் நாளை அவசர ஆலோசனை கூட்டம்!!
டாஸ்மாக் மூடல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை:
பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலும் இயங்கி வந்த டாஸ்மார்க் மதுபானக் கடைகள் கண்டறியப்பட்டு இதுவரை 77 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், மாநிலத்தில் இளைய தலைமுறையைப் பாதிக்கக் கூடிய போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் நேரடித் தலைமையில் தீவிர விழிப்புணர்வு இயக்கங்களும் அதிரடி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிப்படையான பணி நியமனங்கள், முக்கியத் துறைகளின் வெள்ளை அறிக்கை வெளியீடு எனத் தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டபடி சுமாா் 20 வாக்குறுசிகளை இந்த ஆறு மாத காலத்திற்குள்ளாகவே தவெக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.