அதிவேகமாக வந்த லாரி மோதல்.. சாலையில் இழுத்து செல்லப்பட்ட கார்.. அடுத்தடுத்து பலியான 2 இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் சோகம்!
Krishnagiri Lorry Car Accident 2 Died : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பலத்த காயமடைந்த 3 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் ( 22 வயது). இவர், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் மகன் திவாகர் ( 18 வயது), கிருஷ்ணன் மகன் அசோக்குமார் ( 24 வயது), அச்சமங்கலத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் திருப்பதி ( 22 வயது), குமார் மகன் திருப்பதி ( 22 வயது) ஆகிய 5 பேரும் நண்பர்கள் ஆவர். இவர்கள், அனைவரும் சம்பவத்தன்று இரவு காரில் கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரின் பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
கார் மீது பயங்கரமாக மோதிய லாரி
இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதி சாலையில் கவிழ்ந்த நிலையில் சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது. இதில், கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் சதீஷ் உள்பட 5 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!




அடுத்தடுத்து இருவர் உயிரிழப்பு- 3 பேருக்கு சிகிச்சை
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கு இருந்த 5 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி அன்பழகன் மகன் திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், அசோக் குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய காரை மீட்டி அந்த பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
மேலும் படிக்க: பூனையை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்.. ஈரோடு உரிமையாளரின் அட்ராசிட்டி பாசம்.. சோஷியல் மீடியாவில் வைரல் விளம்பரம்!