மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்.. பிணத்தை புகைப்படம் எடுத்து அண்ணனுக்கு அனுப்பிய பயங்கரம்.. திருச்செந்தூரில் கொடூர சம்பவம்!
Tiruchendur Women Murdered : தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பெண் பேராசிரியையை அவரது 2- ஆவது மகன் அம்மிக் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெயா நகரை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா ( 62 வயது). இவர், ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். 2- ஆவது மகன் தங்கபாலன் ( 27 வயது) என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக அன்புமணி மட்டும் தனியாக சென்றிருந்தார். அப்போது, வீட்டில் அவரது மனைவி ரேணுகா மற்றும் 2- ஆவது மகன் தங்கபாலன் ஆகியோர் மட்டும் இருந்தனர். இந்த நிலையில், திடீரென தங்கபாலன் வீட்டிலிருந்த அம்மி கல்லை எடுத்து தனது தாயி ரேணுகா தேவியின் தலையில் போட்டார்.
தாயை கொலை செய்து புகைப்படத்தை அனுப்பிய தம்பி
இதில், ரேணுகாதேவி தலை உடைந்து ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். இதனை, தங்கபாலன் தனது செல்போனில் புகைப்படமாக எடுத்து தனது அண்ணனின் வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்த அவர் கடும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே, இது தொடர்பாக தனது தந்தை அன்பழகனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், அன்பழகன் அவசர அவசரமாக வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது மனைவி ரேணுகா உயிரிழந்து கிடந்தார்.
மேலும் படிக்க: பரமக்குடியில் பரபரப்பு.. காவல் துணை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்… காவல்துறையில் பெரும் ஷாக்!




மகனை கைது செய்த திருச்செந்தூர் போலீசார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரேணுகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக அன்பழகன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க பாலனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு
இதைத் தொடர்ந்து, அவருக்கு மனநல சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து அன்பழகன் மற்றும் அவரது மூத்த மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் பகுதியில் ஓய்வு பெற்ற கல்லூரி பெண் பேராசிரியையை அவரது மகன் அம்மி கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நெல்லையில் பரபரப்பு.. பெண் அளித்த ஒற்றை புகார்.. தூக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்.. அதிரடி காட்டிய DIG!