சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. வண்டலூர் பட்டாம்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு… பல்வேறு அம்சங்கள் புதுப்பிப்பு!
Vandalur Butterfly Park : சென்னை மாவட்டத்தில் வண்ணடலூர் அறிஞர் அண்ணா பூங்காவில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் என்னென்ன அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் .
சென்னை மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓட்டேரி அருகே சுமார் 2.7 ஹெக்டேர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் உள்ள பொருட்கள், இருக்கைகள் உள்ளிட்டவை சேதமடைந்து இருந்தன. இதனை, சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. வெகு நாட்களாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், இந்த பூங்காவானது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதில், பூங்காவில் என்னென்ன அம்சங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!
- பூங்காவின் மையப்பகுதியில் உள்ள உள்புற அரங்கம் கம்பளிப்பூச்சி வடிவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் மேல் பகுதி முழுவதும் புதிய பாலிகார்பனேட் கால்கள் மூலமாக புதுப்பிக்கப்பட்டு பல்வேறு வகையான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
- வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சுற்றி பார்க்க வருகை தரும் பொதுமக்கள் வண்ணத்துப்பூச்சிகளை மிக மிக அருகில் இருந்து பாதுகாப்பாக ரசிக்கும் வகையில் துருப்பிடிக்காத இரும்பு வளைகள் மற்றும் புதிய மூங்கில் கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தங்களின் சொந்த மெய்நிகர் வண்ணத்துப்பூச்சிகளை டிஜிட்டல் திரையில் வடிவமைக்கும் புதிய தொழில்நுட்ப வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக சுமார் 200- க்கும் மேற்பட்ட தாவர வகைகள் நடப்பட்டுள்ளன.
- பூங்கா முழுவதும் உள்ள சேதமடைந்த நீரூற்றுகள் சீரமைக்கப்பட்டு புதுமை பெற்றுள்ளது.
- எலுமிச்சை பட்டாம்பூச்சி. பிளைன் டைகர், பாறை பட்டாம்பூச்சி, கிரிம்சன் ரோஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.
- இந்த வண்ணத்துப்பூச்சிகளுடன் புகைப்படம் எடுப்பதற்காக தனி இடமும் உருவாக்கப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகள் பறக்க விடும் நிகழ்ச்சி
மேலும், வண்ணத்துப்பூச்சி பூங்கா நிர்வாகத்தின் புதிய முயற்சியாக வாரம் தோறும் சனிக்கிழமைகளில் காலை 11:30 மணிக்கு வண்ணத்துப்பூச்சிகளை பறக்க விடும் சிறப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.




பொது மக்களின் வருகை அதிகரிக்க வாய்ப்பு
அத்துடன், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை காலங்களில் வண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் திறக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரும் மக்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறந்த அனுபவத்தை தருவதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: “சொந்த ஊரு வேறயா இருக்கலாம்.. ஆனா உசுரு சென்னைதான்!”.. 387வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வந்தாரை வாழவைக்கும் சென்னை!!