ரூ.1000 கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை.. மாணவர்கள் ஆதார் மூலம் ரூ.70 கோடி கடன் மோசடி.. சேலத்தில் பெண் உள்பட இருவருக்கு காப்பு!
Salem Rs.70 Crore Bank Loan Fraud : சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் ஆதார் கார்டுகளை பயன்படுத்தி தனியார் வங்கியில் ரூ. 70 கோடி கடன் பெற்று மோசடி செய்த சம்பவத்தில் டிரஸ்ட் நிர்வாகி இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் ஆதார் கார்டு நகல்களை பெற்று ரூ. 70 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த சம்பவத்தில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் சின்ன திருப்பதி பகுதியில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி கண்ணகி ( 45 வயது). இவர், சேலம் அஸ்தம்பட்டியில் பெஸ்ட் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரஸ்ட் நிர்வாகிகளுடன் சேர்ந்து மாணவர்களை சந்தித்து உங்கள் வங்கி கணக்குக்கு வரும் ரூ. 1 லட்சத்தை நாங்கள் கூறும் கணக்குக்கு மாற்றம் செய்தால் ரூ.1000 கமிஷன் தருவதாக தெரிவித்தனர். இதை நம்பிய கல்லூரி மாணவர்களிடம் இருந்து ஆதார் கார்டு நகைகளை கண்ணகி தலைமையிலான நிர்வாகிகள் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் ஆதாரை பெற்ற டிரஸ்ட் நிர்வாகிகள்
இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பியதை தொடர்ந்து, அவர்கள் இந்த பணத்தை வேறு வங்கிக்கு மாற்றி விட்டதன் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.1000 கமிஷன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனியார் வங்கியில் இருந்து கல்லூரி மாணவர்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில், கறவை மாடுகள் வாங்கியதற்கான ரூ. 1 லட்சம் கடன் தொகைக்கான தவணையை செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சேலம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும் படிக்க: நீலக்கொடி அங்கீகாரம்.. 6- ஆவது முறையாக மாஸ் காட்டிய கோவளம் கடற்கரை.. இந்த முறையும் தமிழகம் முன்னிலை!




வங்கியில் ரூ.70 கோடி கறவை மாடு கடன்
அந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆதார் கார்டு நகல்களைப் பெற்று, மாணவர்கள் பெயரில் கறவை மாடுகள் கடன் ரூ. 1 லட்சத்தை பெற்று மாணவர்களுக்கு ரூ.1000 கமிஷன் கொடுத்துவிட்டு மீதி தொகையை தங்களது வங்கி கணக்கில் மாற்றி மெகா மோசடியில் கண்ணகி உள்ளிட்டோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் மூலம், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.70 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பெஸ்ட் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நிர்வாகி இருவர் கைது
இதைத் தொடர்ந்து, பெஸ்ட் எம்பவர்மெண்ட் டிரஸ்ட் நிர்வாகி கண்ணகி, அவரது கூட்டாளி முத்துக்குமரன் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் செய்தனர். மேலும், இதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மோசடி செய்யப்பட்ட பணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு.. போலீஸுக்கு தண்ணி காட்டிய தண்டனை கைதி.. மதுரை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோட்டம்!