திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை.. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு வன்கொடுமை.. இருவர் அதிரடி கைது!
Coimbatore Woman Harassing : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், இருவரை கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பகுதி தென்றல் நகரை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கௌதம் என்பவருக்கும் கடந்த 2019- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2023- ஆம் ஆண்டு முதல் கணவர் கௌதமை பிரிந்து அந்த பெண் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது, இவர் சூலூர் திரையரங்கம் பின்புறம் உள்ள ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கும் அவரது அலுவலகத்தின் அருகில் உள்ள அறையில் வசித்து வரும் அந்தோணி மரிய ராபின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பெண்ணின் குடும்ப பின்னணிகளை குறித்து அந்தோணி கேட்டுள்ளார். அதற்கு, அந்த பெண்ணும் தனது திருமண வாழ்வில் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அந்தோணியுடன் ஒராண்டாக வசித்து வந்த பெண்
ஒரு கட்டத்தில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அந்தோணி மரிய ராபின் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அந்தோணியுடன் கடந்த ஒரு ஆண்டாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தோணிக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த அந்த பெண் கடும் ஆத்திரம் அடைந்து அந்தோணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அவரிடம் பேசாமல் இருந்து வந்தார்.
மேலும் படிக்க: மறுவாழ்வு மையமா? மரண மையமா? நெல்லையில் சிறுவன் ரத்த காயங்களுடன் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை!




மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்தோணி மரிய ராபின் மற்றும் அவரது நண்பர்கள் கிரீஸ் சாமுவேல் குமார் ஆகியோர் அந்த பெண்ணின் அலுவலகத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து குடிக்குமாறு கூறியுள்ளனர். இதனையும், அந்த பெண் நம்பி குடித்த நிலையில் மயங்கினார். பின்னர், அந்த பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
வீடியோவை காண்பித்து கொலை மிரட்டல்
பின்னர், மயக்கம் தெளிந்த அந்தப் பெண் இது குறித்து கேட்ட போது, உன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறி மிரட்டி உள்ளனர். மேலும், தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்றும் உன்னையும், குழந்தையையும் கொலை செய்து விடுவதாக அந்தோணி மிரட்டி உள்ளார். இது குறித்து, அந்தப் பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரீஷ் சாமுவேல் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை.. குப்பை தொட்டியில் பதுக்க முயன்ற லஞ்ச பணம்.. தட்டி தூக்கிய போலீஸ்!