தவெக அரசுக்கு அடுத்த செக்.. திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’.. அதிர்ச்சியில் கோட்டை!!
தவெகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தங்களது அதிகார எல்லையை மீறி அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து 'ஆய்வு' என்ற பெயரில் அங்குள்ள அரசு ஊழியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். தங்களுக்குச் சாதகமாகச் செயல்படச் சொல்லி அதிகாரிகளுக்குக் கடுமையான நிர்பந்தங்களை வழங்கி, அரசு நிர்வாகத்தை முடக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, ஜூலை 04: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையிலான கூட்டணி அரசு, வெளிப்படையாகவே குதிரை பேர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சியான திமுக சார்பில் இன்று ஆளுநரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திமுகவின் சட்டத்துறை மாநில நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து இந்த விரிவான எழுத்துப்பூர்வமான புகாரை அளிக்கவுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுச் சில மாதங்களே ஆகியுள்ள சூழலில், தவெக அரசுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆளுநரை நாடவிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிக்க: கைதில் இருந்து தப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்.. ஆனால் 10 நாட்களுக்கு.. தூத்துக்குடி கோர்ட் உத்தரவு!
திமுக முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள்:
திமுகவின் சட்டத்துறை நிர்வாகிகள் ஆளுநரிடம் அளிக்கவுள்ள மனுவில் தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் முக்கிய விவரங்கள் வருமாறு, தவெக அரசு தங்களது அரசியல் பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைக்கவும் வெளிப்படையாகவே குதிரை பேர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று திமுக மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக இந்த அரசு செயல்படுவதாக அவர்கள் சாடியுள்ளனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரம்:
திமுகவின் முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் நேற்றைய தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை, காவல்துறையினர் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தனியாக வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நீண்ட நேர விசாரணையில் பெரும் மர்மம் நீடிப்பதாகவும், இது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என்றும் திமுக சந்தேகம் எழுப்பியுள்ளது.
சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு:
தவெக அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திற்குள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக திமுக கூறியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொலைச் சம்பவங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பரவலாக அதிகரித்து வருவதாகக் புள்ளிவிவரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர் விவகாரமும் அமைச்சர்களின் பேச்சும்:
கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்தில், அப்போதைய திமுக அரசுக்கும் காவல்துறைக்கும் தொடர்பு இருப்பதாகத் தற்போதைய தவெக அமைச்சர்கள் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். எவ்வித ஆதாரமுமின்றி அரசியல் ஆதாயத்திற்காக அமைச்சர்கள் இவ்வாறு பேசி வருவது குறித்தும் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்ச ஊழல்:
தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களுக்குப் புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் பணியைத் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நியமனங்களில் தகுதி புறக்கணிக்கப்பட்டு, பெருமளவில் லஞ்ச ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக புகார் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு தவெகவினர் அச்சுறுத்தல்:
தவெகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தங்களது அதிகார எல்லையை மீறி அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து ‘ஆய்வு’ என்ற பெயரில் அங்குள்ள அரசு ஊழியர்களை அச்சுறுத்தி வருகின்றனர். தங்களுக்குச் சாதகமாகச் செயல்படச் சொல்லி அதிகாரிகளுக்குக் கடுமையான நிர்பந்தங்களை வழங்கி, அரசு நிர்வாகத்தை முடக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யக்கோரி போலீசார் நிர்பந்தம்.. தவெகவில் இணையக்கோரி அழுத்தம்.. அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அரசியல் பின்னணி:
கடந்த சில நாட்களாகவே மதுரையில் ஆளுநர் ஆர்லேகர் அரசு அதிகாரிகளுடன் தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்தியதும், அதற்குத் தமிழக அரசுத் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஆளுநர் – ஆளும் தவெக அரசு மோதலுக்கு இடையே, எதிர்க்கட்சியான திமுக, தவெக அரசுக்கு எதிராக ஆளுநரிடமே புகார் அளிக்கச் செல்வது தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.