காணாமல் போன பெண் கல்குவாரியில் சடலமாக மீட்பு.. நகை- பணத்துக்காக தீர்த்துக்கட்டிய மருமகன்.. திருப்பத்தூரில் கொடூரம்!
Tirupattur Women Murder : திருப்பத்தூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக மாமியாரை கடத்தி சென்று கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசி சென்ற மருமகனை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நேதாஜி நகர் தெற்கு பகுதி பாரத் நகர் பகுதியில் மூடப்பட்டு கிடக்கும் கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதப்பதாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்டவர் அரூர் அருகே உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சசிகலா என்பதும், இவரது கணவர் அசோகன் என்பதும் தெரியவந்தது. அதன்படி, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மாமியாரிடம் நகை- பணம் கேட்ட மருமகன்
இதில், அசோகன்- சசிகலா தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சசிகலா காணாமல் போனவர். அத்துடன் வீட்டில் இருந்த 24 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணமும் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக, அசோகன் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான விசாரணையில், சசிகலாவின் மகள் உமா மகேஸ்வரி என்பவர் அஸ்லம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அஸ்லமுக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும், இந்த கடனை அடைப்பதற்கு மாமியார் சசிகலாவிடம் இருந்த நகைகளை கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பாஜக தேசிய மகளிரணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!




மாமியாரை கடத்தி கொலை செய்த மருமகன்
ஆனால், சசிகலா தனது நகைகளை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருமகன் அஸ்லம், சசிகலாவை கடத்திச் சென்று கொலை செய்து வாணியம்பாடி அருகே உள்ள கல் குவாரியில் உள்ள நீரில் வீசி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த அஸ்லமை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருமகன் கைது- சிறையில் அடைப்பு
இதில், மாமியாரை கொலை செய்வதற்கு உதவியாக அஸ்லமுக்கு சிலர் உதவி செய்ததாக தெரியவந்தது. அதன் அடிப்படையில், மேலும் சிலரை கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கைதான அஸ்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூரில் நகைக்காக மாமியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது விசிக? தவெகவுடன் கூட்டணி தொடரும்.. தொல்.திருமாவளவன் அறிவிப்பு!