காஞ்சிபுரத்தில் 2 இளைஞர்கள் கொடூர கொலை.. பெரும் பரபரப்பு.. எஸ்.பி. தலைமையில் ஏராளமான போலீசார் குவிப்பு!
Kancheepuram 2 Youths Murdered : காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக படுநெல்லி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. விழாவில் கானா பாடல் நடைபெற்ற போது, அதே கிராமத்தை சேர்ந்த பகவதி மற்றும் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கானா பாடல் போடும்படி வலியுறுத்தினர். இதற்கு, கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. அப்போது, திருவிழாவை பார்ப்பதற்காக வந்திருந்த இளைஞர்கள் சிலர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கிராம மக்கள் முறையிட்டனர். உடனே, போலீசார் கானா பாடல் பாடுமாறு கூறிய இளைஞர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் நள்ளிரவு கோவில் அருகே சத்தம் கேட்டது. இதனால், அச்சமடைந்த கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
இரு இளைஞர்கள் கொடூர கொலை
அப்போது, படுநெல்லி கிராமத்தை சேர்ந்த விக்கி என்ற நீலகண்டன் ( 25 வயது), சந்துரு ( 24 வயது) ஆகிய இருவரும் முகம், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொன்னேரிக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!




சடலத்தை எடுக்கவிடாமல் போலீசாருடன் வாக்குவாதம்
அப்போது, சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் மற்றும் இளைஞர்களின் உறவினர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், உடன்பாடு எட்டிய நிலையில், கொலையுண்டவர்களின் சடலங்களை போலீசார் எடுத்து செல்வதற்கு அனுமதித்தனர். அவர்களது சடலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கொலையாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம்
இது குறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் படுநெல்லி கிராமத்தை சேர்ந்த பகவதி, புஷ்பராஜ், கலைச்செல்வன் ஆகிய 3 பேர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படுநெல்லி கிராமத்தில் காஞ்சிபுரம் எஸ். பி. அரவிந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “சந்தி சிரிக்கும் சர்க்கஸ் சர்க்கார்” தவெக அரசின் 100 ஆட்சியில் 546 குற்ற சம்பவங்கள்…திமுக வீடியோ வெளியிட்டு விமர்சனம்!