தூத்துக்குடி லாக்அப் மரண சர்ச்சை.. இளைஞரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. நடந்தது என்ன?
Thoothukudi lockup death Arunachalam: தூத்துக்குடி லாக்கப் மரணம் அருணாச்சலம் விவகாரத்தில் பிரேத பரிசோதனை முடிவடைந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அருணாச்சலம் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவரும் என்பதால் இச்சம்பவம் தொடர்ந்து தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வுக்குப் பின் அருணாச்சலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
மேலும் படிக்க: 200-க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்களிடம் ரூ.20 கோடி மோசடி.. பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு சிறை!!
சட்டவிரோத மது விற்பனை கைதும் காயங்களும்:
தூத்துக்குடியைச் சேர்ந்த 26 வயதான அருணாச்சலம், அப்பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடை பாரில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூலை 17-ல் கடை மூடிய பிறகு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் போலீசார் அருணாச்சலத்தைக் கைது செய்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அன்று மாலையே தலை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் அருணாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை வாங்க மறுத்துப் போராட்டம்:
காவல்துறையினர் தாக்கியதால் தான் அருணாச்சலம் உயிரிழந்தார் எனக் குற்றம்சாட்டிய உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்துத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அருணாச்சலத்தின் தாய் மற்றும் குடும்பத்தினர் “என் பிள்ளைக்கு நீதி வேண்டும், போலீசார் அடித்தே கொன்றுவிட்டனர்” எனப் பேட்டியில் கண்ணீர்மல்கத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் அருணாச்சலத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மயங்கி விழுந்தார் எனப் போலீஸ் மறுப்பு:
இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அருணாச்சலம் காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அதன்பின்னரே அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் காவல் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளையும் காவல்துறை தரப்பு வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற நடுவர் விசாரணை & உடற்கூறாய்வு:
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்த அருணாச்சலத்தின் குடும்பத்தினர், நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உடற்கூறாய்வைச் சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி அருணாச்சலத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
ரிப்போர்ட் வந்ததும் நடவடிக்கை:
காவல்துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் சிடி ஆகியவை 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த அறிக்கையைப் பார்த்த பிறகே காயங்களின் தன்மை மற்றும் காவல்துறை தாக்குதல் குறித்துத் தெரியவரும். அறிக்கை வந்தவுடன் நீதிமன்றம் மூலமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும் இழப்பீடும் கிடைக்கச் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரும்” என்றனர்.
மேலும் படிக்க: வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எந்தெந்த இடங்களுக்கு தெரியுமா?
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அருணாச்சலம் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவரும் என்பதால் இச்சம்பவம் தொடர்ந்து தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.