Tamil Nadu Weather report: இன்று 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழகத்தில் நீலகிரி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செப்டம்பர் 30, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 5, 2026 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 30 : தமிழகத்தில் நீலகிரி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் செப்டம்பர் 30, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வட தமிழகத்தின் மீது வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. அதோடு, தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீண்டு காணப்படுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாக வருகிற அக்டோபர் 5, 2026 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சவுக்கு சங்கருக்கு மீண்டும் சிறைவாசம்.. 3 ஆண்டுகள் தண்டனை.. எழும்பூர் நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!




11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் செப்டம்பர் 30, 2026 இன்று நீலகிரி உள்ளிட்ட மேற்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்கள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலதத காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் மிதமான மழை பதிவாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு வானிலை எப்படி?
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 1, 2026 நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2026 முதல் அக்டோபர் 5, 2026 வரையிலான 4 நாட்களில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : திருச்சி விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு? திருப்பதியுடன் இணைந்து குத்தகைக்கு விட திட்டம்
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செப்டம்பர் 30, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம். ஆனால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும்.