முதல்வர் விஜய் பாணியில் களமிறங்கிய அமைச்சர் அருண்ராஜ்.. தாராபுரம் மக்களை கவர புதிய யுக்தி!
Arunraj Canvassed For Votes Emulating Vijay Style : தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, முதல்வர் விஜய் பாணியில் அவரது செய்கைகளை காண்பித்து அமைச்சர் அருண்ராஜ் வாக்குகளை சேகரித்தார். முழு விவரத்தை பார்க்கலாம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு அந்த தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால், தவெக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தொகுதி மக்களை கவரும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் மற்றும் வேட்பாளர் ஆகியோர் பல்வேறு யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் தாராபுரம் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
முதல்வர் விஜய் பாணியில் வாக்கு சேகரித்த அமைச்சர்
அப்போது, முதல்வர் விஜய் பாணியில், அவரது செய்கைகளை போலவே செய்து காண்பித்து வாக்காளர்களை கவரும் வகையில் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் செய்த சைகையும், தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டங்கள், கட்சி பிரச்சாரங்கள் ஆகியவற்றில் பங்கேற்றிருப்பவர்களை பார்த்து முதல்வர் விஜய் ஹார்ட்டின் சைகை செய்வது போன்ற செயல்களை அமைச்சராக அருண்ராஜ் செய்து காண்பித்து இருந்தார். இதேபோல, பொதுமக்களிடம் நெருக்கமாக சென்று பேசுவதுடன், அவர்களின் குறைகளை முதல்வர் விஜய் கூர்ந்து கவனிப்பது போல அருண்ராஜ் கோரிக்கைகளை கேட்டிருந்தார்.
மேலும் படிக்க: தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!




தாராபுரம் தொகுதி மக்கள் மத்தியில் கவனம் ஈர்ப்பு
இது, தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்தது. இதனை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, தவெக வேட்பாளர் சத்தியபாமா முதல்வர் விஜயின் மெழுகு சிலையுடன் தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார். இடைத்தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகம் பல்வேறு கட்ட யுக்திகளை வகுத்து வரும் நிலையில், வாக்காளர்களை கவரும் விதமாகவும், அவர்களது வாக்குகளை பெறும் விதமாகவும் தமிழக வெற்றி கழகத்தினர் நூதன யுக்திகளை கையில் எடுத்துள்ளனர்.
அதிருப்தியில் இருக்கின்றனரா தாராபுரம் மக்கள்
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு சத்தியமாமா வந்ததன் காரணமாக, அவர் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் இத்தகைய யுக்திகளை கட்சியினர் முன்னெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!