AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்

Tanishq Heist - Commissioner Pressmeet: நிஷாந்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்றும், மீனாட்சியுடன் சேர்த்து விசாரித்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். தேவைப்பட்டால் மீனாட்சியின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

கடன் பிரச்னை, ஆடம்பர வாழ்க்கைக்காக தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளை! யூடியூபர் நிஷாந்த் குறித்து காவல் ஆணையர் பரபரப்பு தகவல்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Nov 2026 18:45 PM IST

நவம்பர் 17, 2026: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 11.384 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், யூடியூபர் நிஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் பிரச்னை மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக இந்தக் கொள்ளையில் அவர் ஈடுபட்டதாக மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

9 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல்

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுமார் 11 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பழங்காநத்தம் அருள்ஜோதி நகரைச் சேர்ந்த யூடியூபர் நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியார் ஆகியோர் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, நவம்பர் 14ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மீனாட்சி அளித்த தகவலின் அடிப்படையில், மாடக்குளம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5.7 கிலோ நகைகளை போலீசார் மீட்டனர்.

இதற்கிடையே தலைமறைவாக இருந்த நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஓசூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

பேருந்தில் தப்ப முயன்றபோது கைது

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் நிஷாந்த் பயணிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தர்மபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே பேருந்தை போலீசார் மடக்கினர். அப்போது தப்பிச் செல்ல முயன்ற நிஷாந்தை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், விளாச்சேரி அருகே மலை அடிவாரத்தில் புதைத்து வைத்திருந்த மீதமுள்ள நகைகளையும் போலீசார் மீட்டனர். இதன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட 11.384 கிலோ நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டாட்டூ மூலம் அடையாளம் கண்ட போலீசார்

நிஷாந்தை மதுரைக்கு அழைத்து வந்த போலீசார், எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நீதிபதி லட்சுமி பிரியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளை: காவல் ஆணையர்

இந்த வழக்கில் மீட்கப்பட்ட நகைகளை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் போலீசார் காட்சிப்படுத்தினர். அவற்றைப் பார்வையிட்ட மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தக் கொள்ளை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், நிஷாந்தின் உடலில் இருந்த டாட்டூ அவரை அடையாளம் காண முக்கியக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், கடன் பிரச்னை, உடனடி பணத் தேவை மற்றும் ஆடம்பர வாழ்க்கைக்காக நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மீனாட்சியின் காதலுக்காகவும் அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: திருமண நாளில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம்.. தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை வெளியீடு..

நிஷாந்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்றும், மீனாட்சியுடன் சேர்த்து விசாரித்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார். தேவைப்பட்டால் மீனாட்சியின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

நகைக்கடைகளுக்கு வரும் அனைவரையும் சந்தேகமின்றி நம்பிவிடக் கூடாது என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow Us