ரூ.46 கோடி காசோலை மோசடி – நடிகை ராதாவிடம் 3 மணி நேரம் விசாரணை – அம்பிகாவுக்கும் சம்மன் அனுப்ப திட்டம்
Radha Ambika Case Update : நடிகை ராதா அளித்த ரூ.46 கோடி காசோலை மோசடிப் புகார் தொடர்பாக, அவரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் செப்டம்பர் 29,2026 இன்று சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, செப்டம்பர் 29 : இதன் தொடர்ச்சியாக, அவரது சகோதரியும் நடிகையுமான அம்பிகாவை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காசோலை மோசடி தொடர்பாக நடிகை ராதாவிடம் 3 மணி நேரம் விசாரணை
கடந்த செப்டம்பர் 21,2026 அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா ஒரு புகார் மனுவை அளித்தார். தனது சகோதரி அம்பிகாவும் சகோதரரும், தனக்குத் தெரியாமல் தன்னுடைய ஐந்து காசோலைகளை எடுத்து, அவற்றின் மூலம் ரூ.46 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தான் பரிவர்த்தனையைத் தான் தடுத்து நிறுத்திவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிக்க : தாராபுரம் மக்களை சாந்தப்படுத்த.. “எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” வேட்பாளர் சத்யபாமா எடுத்த டெக்னிக்!
இந்த நிலையில் நடிகை ராதாவின் குற்றச்சாட்டை அம்பிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 23,2026 அன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா, காசோலைகளைத் தான் திருடவில்லை என்றும், குடும்ப நகைகள் மற்றும் சொத்துகளில் தனக்குச் சேர வேண்டிய பங்குக்காக ராதாவே அவற்றைத் தன்னிடம் கொடுத்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவை திரும்பி வந்துவிட்டதாகவும், அப்படிப் பார்த்தால் முதலில் புகார் அளிக்க வேண்டியது நான் தான் என்றும் அம்பிகா தெரிவித்திருந்தார். ராதாவின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து புகார் குறித்து விளக்கம் அளிக்க, செப்டம்பர் 24, 2026 அன்று நேரில் ஆஜராகுமாறு ராதாவுக்கு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடித் தடுப்புப் பிரிவில் செப்டம்பர் 29, 2026 இன்று ராதா ஆஜரானார். தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்த விவரங்கள் குறித்து, அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிக்க : தவெக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் ஷாக்.. குபீரென கைத்தட்டி சிரித்த சத்யபாமா!
ராதா அளித்த விளக்கங்களின் அடிப்படையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, அம்பிகாவிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துகள் தொடர்பான குடும்பப் பிரச்னையாகத் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது காவல்துறை விசாரணை வரை சென்றுள்ளதால், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


