தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. ஆயுதப்படை காவலர் திடீர் மரணம்.. சோகத்தில் முடிந்த கதை!
Thoothukudi Firing Incident Constable Passes Away: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் ராஜா உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதப்படை காவலர் ராஜா உடல் நல குறைவால் நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும் என்று கருதிய அந்த பகுதி மக்கள் கடந்த 2018- ஆம் ஆண்டு மே மாதம் 22- ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாபெரும் அமைதி போராட்டத்தை மேற்கொண்டனர். இந்த அமைதிப் போராட்டமானது திடீரென கலவரமாகவும், வன்முறையாகவும் மாறியது. இதில், பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். குறிப்பாக அந்த சம்பவத்தில் காவல்துறை வாகனத்தின் மேல் பகுதியில் நின்றவாறு மஞ்சள் மற்றும் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்த காவலர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆயுதப்படை காவலர் ராஜா உயிரிழப்பு
இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த நபர் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் ராஜா என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆயுதப்படை காவலர் ராஜாவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை உறவினர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. மாவட்ட எஸ்.பி. மீது வழக்குப்பதிவு.. காவல்துறையில் பெரும் பரபரப்பு!




துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவலருக்கு கடும் கண்டனம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது இவர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், இவருக்கு கடுமையான கண்டனங்கள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான குற்றப்பத்திரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகளை காப்பாற்றும் வகையில் குற்றப்பத்திரிக்கை
இதில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரை காப்பாற்றும் வகையில் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: அன்பில் மகேஸ் கூட்டாளி இடங்களில் சிசிபி திடீர் சோதனை.. 44 ஆவணங்கள்- மடிக்கணினி பறிமுதல்.. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை!