மாரியப்பனின் ஷூ முதல் தஞ்சை வீணை வரை – பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் ஏலம்
PM Mementos e-Auction 2026 : பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை மின்னணு முறையில் ஏலம் விடும் நிகழ்வு வருகிற அக்டோபர் 2, 2026 வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 31 பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை மின்னணு முறையில் ஏலம் விடும் நிகழ்வின் 8வது பதிப்பில், தமிழகத்தைச் சேர்ந்த 31 நினைவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. தமிழக வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள், ஆன்மிகச் சின்னங்கள், பாரம்பரியக் கலைப்படைப்புகள் எனத் தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் பொருட்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள் ஏலம்
பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளான செப்டம்பர் 17,2026 அன்று இந்த ஆண்டுக்கான ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதிலும் இருந்து பிரதமருக்குக் கிடைத்த 1,498 நினைவுப் பரிசுகள் ஏலத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாராலிம்பிக் வீரர்களின் பொருட்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றுள்ளது விளையாட்டு ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக உயரம் தாண்டுதலில் தொடர்ந்து 3 பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுடன் தொடர்புடைய காலணிகள் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன.




இதையும் படிக்க : சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் ஒரு வரலாற்று சாதனை.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள்!
மேலும் கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனின் பேட்மிண்டன் பேட், அதே போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன் கையொப்பமிட்ட பேட் ஆகியவை ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக பாரம்பரிய அடையாளங்கள்
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவகம் சார்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட, சட்டமிடப்பட்ட பாதச்சுவடு நினைவுப் பரிசு முக்கியமான ஒன்றாகும். மேலும் குமரி அம்மனின் திருப்பாதங்கள் பதிந்ததாக நம்பப்படும் ஸ்ரீ பாதப்பாறையை நினைவுகூரும் வகையில் இது அமைந்துள்ளது.
மேலும் வைணவ ஆச்சாரியரான ஸ்ரீ ராமானுஜர், சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நினைவுச் சிற்பமும் ஏலத்துக்கு வந்துள்ளது. இதுதவிர, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவக் கோலத்தைச் சித்தரிக்கும் உலோக நடராஜர் சிலை, ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளின் சட்டமிடப்பட்ட பக்தி ஓவியம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சித்தரிக்கும் பித்தளை நினைவுப் பரிசு ஆகியவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தமிழகக் கோயில் தேர்களின் வடிவமைப்பைப் பின்பற்றி கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட திருவாரூர் தேர் மாதிரி, கலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறது. தங்கத் தகடால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சாவூர் பாணி வீணைக் கலைப்படைப்பும் இந்த ஏலத்தின் சிறப்புப் பொருட்களில் ஒன்று.
தஞ்சாவூர் ஓவிய மரபின் அழகைக் காட்டும் முருகப்பெருமானின் பாரம்பரிய ஓவியமும், தங்கத் தகட்டில் வடிவமைக்கப்பட்ட முருகன் உருவமும் ஏலத்தில் உள்ளன. தமிழகத்தின் நெசவுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜரிகை மற்றும் நெய்த கரைகளுடன் கூடிய தென்னிந்திய அங்கவஸ்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க ; கிராமத்தை ஆள்வது யார்? உண்மையான முடிவுகள் எப்படி எடுக்கப்படுகின்றன?
ஏலம் எடுப்பது எப்படி?
பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். இந்த ஏலம் அக்டோபர் 2, 2026 அன்று வரை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://pmmementos.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, பொருட்களைப் பார்வையிட்டு ஏலத் தொகையைப் பதிவு செய்யலாம். ஆன்மிகம், கலை, கைவினை, வரலாறு, நெசவு, விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் தமிழகத்தின் பங்களிப்பை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில் இந்த 31 பொருட்களும் அமைந்துள்ளன.