“தனியார் கைக்குச் செல்லும் டாஸ்மாக் கடைகள்?”.. பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற திட்டம்!
Tasmac Privatization Tamil Nadu: தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்க அரசு ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக நகராட்சிப் பகுதிகளில் தனியார் உரிமம் வழங்கும் வகையில் ஆகஸ்ட் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை, ஜூலை 29: தமிழ்நாட்டில் மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக, தமிழக அரசு முதற்கட்ட நிர்வாக மற்றும் சட்ட ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4,048 சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.48,000 கோடி அளவுக்குப் பிரம்மாண்டமான வருவாய் கிடைத்து வருகிறது.
இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?
முதற்கட்ட சோதனை முயற்சி?
இதுவரை டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர்களும் துறை அதிகாரிகளும் மறுத்து வந்த நிலையில், தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து, முதற்கட்டமாக நகராட்சி வரம்பிற்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளைத் தனியாரிடம் உரிமம் முறையில் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
தனியாரிடம் ஒப்படைப்பதால் பலன்:
MRP விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது, பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது போன்ற புகார்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைகளை நேரடியாக நடத்துவதற்குப் பதிலாகத் தனியார் முகவர்களுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் அரசிற்கு நிலையான உரிமக் கட்டணமும் வரி வருவாயும் தடங்கலின்றி கிடைக்கும்.
பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம்?
டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை அதிகாரத்தைத் தனியாருக்கு மாற்றுவதற்குத் தற்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு, கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஆகஸ்ட் மாதச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சிறப்புச் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் துறை அதிகாரிகள் வரைவுத் திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, நகராட்சிப் பகுதிகளில் திறக்கப்படவுள்ள தனியார் மதுபானக் கடைகளுக்கான டெண்டர் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது.
எழும் கேள்விகளும் சவால்களும்:
அரசு இத்தகைய முடிவை நோக்கிய நகர்வை எடுத்து வைத்தாலும், இதில் சில முக்கியச் சவால்களும் காத்திருக்கின்றன. தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பணிப் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் சூழலில், தனியாரிடம் ஒப்படைத்தால் மதுக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சமும், அரசியல் ரீதியான எதிர்ப்புகளும் கிளம்ப வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!
ஆயினும், வரவிருக்கும் ஆகஸ்ட் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான முழுமையான சட்ட வடிவம் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.