அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?
Rice Price Hike: வறட்சி, நெல் விளைச்சல் குறைவு மற்றும் வெளிமாநில வியாபாரிகளின் அதிகப்படியான கொள்முதல் காரணமாகத் தமிழ்நாட்டில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. நெல் தட்டுப்பாட்டால் 50% அரிசி ஆலைகள் முடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை, ஜூலை 29: தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்வியலை நேரடியாகப் பாதிக்கும் வகையில், அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அரிசி மூட்டைக்கு ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரையிலும் விலை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு, காய்கறி விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது அத்தியாவசிய உணவான அரிசியின் விலையும் சுடச்சுட உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!
வறட்சியும் நெல் விளைச்சல் சரிவும்:
இந்த திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் பல முக்கியக் காரணங்கள் இருப்பதாக அரிசி மொத்த வியாபாரிகளும் ஆலை உரிமையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். பருவமழை பொய்த்துப்போனதாலும், காவேரி உள்ளிட்ட ஆற்றுப் பாசனப் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததாலும் தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
வெளிமாநில வியாபாரிகளின் படையெடுப்பு:
கடந்த ஆண்டு தமிழகத்தில் நெல் விளைச்சல் ஓரளவுக்கு இருந்தபோதிலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நிலவிய கடுமையான வறட்சி காரணமாக அம்மாநில வியாபாரிகள் தமிழகத்திற்கே நேரடியாக வந்து, கூடுதல் விலை கொடுத்து நெல் மூட்டைகளைக் மொத்தமாகக் கொள்முதல் செய்து கொண்டு சென்றுவிட்டனர்.
50 சதவீத அரிசி ஆலைகள் முடக்கம்:
இதனால் தமிழகத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு போதிய அளவு நெல் வரத்து கிடைக்கவில்லை. இதன் காரணமாக, மாநிலத்தின் மொத்த அரிசி ஆலைகளில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆலைகள் இயங்க முடியாமல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அரிசி ரகங்களின் விரிவான விலை ஒப்பீடு:
சந்தையில் அதிகம் விற்பனையாகும் பொன்னி மற்றும் இட்லி அரிசி ரகங்களின் தற்போதைய விலை நிலவரம். முன்பு ரூ.1,500-க்கு விற்பனையான வெள்ளை சன்ன பொன்னி அரிசி, தற்போது ரூ.1,850 முதல் ரூ.1,900 வரை உயர்ந்து மூட்டைக்கு ரூ.350 முதல் ரூ.400 வரை அதிகரித்துள்ளது. ராஜபோக பொன்னி அரிசியின் விலை ரூ.1,100-லிருந்து ரூ.1,600 ஆகவும், மல்லிகை / கிச்சடி பொன்னி அரிசியின் விலை ரூ.1,200-லிருந்து ரூ.1,700 ஆகவும் உயர்ந்து, இவ்விரண்டு ரகங்களும் தலா ரூ.500 வரை கடுமையான விலையேற்றத்தைக் கண்டுள்ளன.
அதேபோல், எளிய மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான திடம் / குண்டு இட்லி அரிசி முன்பு ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,050 முதல் ரூ.1,550 வரை உயர்ந்து, மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.650 வரை அதிரடி உயர்வைப் பதிவு செய்துள்ளது. மேலும், ரூ.800-க்குக் கிடைத்து வந்த சாதாரண சாப்பாட்டு அரிசி தற்போது ரூ.1,150 ஆக உயர்ந்து, ரூ.350 வரை விலை அதிகரித்துள்ளது.
26 கிலோ மூட்டை ரூ.2,000-ஐத் தொடும்:
சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய அரிசி வணிக மையங்களில் நெல் வரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால், இந்த விலை உயர்வு தற்காலிகமானது அல்ல என்றும், இன்னும் சில வாரங்களில் 26 கிலோ எடைகொண்ட சன்ன ரக அரிசி மூட்டையின் விலை ரூ.2,000 என்ற புதிய உச்சத்தைத் தொடும் என்றும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். அரிசி விலை இவ்வாறு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வது எளிய மக்களுக்கு, மாதாந்திர குடும்ப வரவு செலவுத் திட்டத்தைக் தலைகீழாக மாற்றியுள்ளது.
இதையும் படிக்க: ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!
நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தலையிட்டு வெளிமாநிலங்களுக்கு நெல் கடத்தப்படுவதைத் தடுப்பதோடு, நியாயவிலைக் கடைகள் மூலமாகவோ அல்லது சிறப்புச் சந்தைகள் மூலமாகவோ திறந்தவெளியில் குறைந்த விலைக்கு அரிசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.