Tamil Nadu News Highlights: கோயிலுக்குள் சாதியா? – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
Tamil Nadu Breaking news Today 17 July 2025, Highlights: கோயிலுக்குள் நுழைபவர்களை சாதி அடிப்படையில் தடுப்பவர்கள் மீது காட்டமான கருத்து ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்படி செய்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு செய்திகள்
- நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஜூலை 17, 2025 இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலெர்ட் கொடுத்துள்ளது. இதனையடுத்து அங்கு கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை குறித்த தகவல்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (Mk Stalin) தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து திட்டமிட இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான திமுகவின் திட்டங்கள் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடுகளால், நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சரியான முறையில் செயல்படவில்லை எனக்கூறியும் அதிமுக (Admk) சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ஜூலை 17, 2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. ஆர்ப்பாட்டம் குறித்து இந்தப் பகுதியில் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரை மாவட்ட தலைநகர்களில் மறியல் போராட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். போராட்டத்தின் போது எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் இந்த பகுதியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு செய்திகளை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க
LIVE NEWS & UPDATES
-
Nainar Nagendran: ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கு – சிக்கலில் நயினார் நாகேந்திரன்
2024 நாடாளுமன்ற தேர்தலின்போது ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு பணப்பட்டுவாடா செய்ய உதவியது உறுதியானதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு உதவியது கால் ரெக்கார்ட் உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
சேலம் அருகே மேம்பாலத்தில் விரிசல் – கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மேம்பாலம் வழியாக இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் ரிங் ரோடு – பேருந்து நிலையம் அருகே சர்வீஸ் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-
TVK Conference: தவெக இரண்டாவது மாநாடு.. காவல்துறை எழுப்பியுள்ள கேள்விகள்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 2025, ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்துள்ளார். இப்படியான நிலையில் மாநாடு தொடர்பாக 50 கேள்விகள் கேட்டு அதற்கு பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளது.
-
தாமதமாக வந்த மாணவர்கள்.. தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்
சிவகாசியில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாட்டிலால் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மது அருந்தியிருந்தாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
-
கிட்னி விற்பனை மோசடி.. அலறும் நாமக்கல்.. நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விற்பனை மோசடி நடந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த மோசடியானது விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க
-
கோயிலுக்குள் சாதி .. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சாதிய அடிப்படையில் கோயிலுக்குள் நுழைபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அரியலூர் அருகே அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
திடீரென 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து வருகின்றனர். அவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர். சமீபகாலமாக அடிக்கடி திருச்செந்தூர் கடல் உள்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
உதவி கலெக்டர் என ஏமாற்றி திருமணம்.. வசமாக சிக்கிய பெண்
நாமக்கலில் உதவி கலெக்டர் என ஏமாற்றி வங்கி உதவி மேலாளரை திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக போலி நியமன ஆணை, அடையாள அட்டையை தயாரித்ததும் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு அந்த பெண் ஏமாற்றியது தெரிய வந்தததால் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் படிக்க
-
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி? – வைகை செல்வன் கொடுத்த பதில்
அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறுமா என்பது போக போக தெரியும் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். நிச்சயம் அடுத்த முறை திமுக வரக்கூடாது என்பதற்காகவே மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
காமராஜர் பற்றி கருத்து.. திமுகவை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
காமராஜர் பற்றி திமுக எம்.பி., திருச்சி சிவா பேசிய கருத்துக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரையை சுட்டிக்காட்டிய இபிஎஸ், காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலியின் சித்திரங்களை யாரும் மறந்து விடவில்லை என கூறியுள்ளார்.
-
காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில் காலை உணவருந்திய 33க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
-
காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு உரிமை கிடையாது – அண்ணாமலை
காமராஜரைத் தாண்டி காங்கிரஸுக்கு தமிழகத்தில் அடையாளம் கிடையாது என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். அதேசமயம் காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு ஒரு சதவீதம் கூட உரிமை கிடையாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
8 மாத குழந்தை இறந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவரின் 8 மாத குழந்தைக்கு சளி இருந்ததால் கற்பூரத்துடன் தைலம் சேர்த்து தேய்க்கப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை பிறக்கும் போதே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-
Tamil Nadu Rains Live: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று (ஜூலை 17) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
-
கூட்டணி ஆட்சி தான்.. அமித்ஷாவிடம் அதிமுகவினர் பேசலாம்: அண்ணாமலை!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனவே இதில் மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் அதிமுகவினர் பேசலாம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
MK Stalin: திமுக உறுப்பினர் சேர்க்கை.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு
திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும் படிக்க
-
காமராஜர் பற்றி சர்ச்சை கருத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
காமராஜர் பற்றி பொதுவெளியில் விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில்தான் எந்த கருத்தும் பகிரப்பட வேண்டும். கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடமளிக்காதீர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க
-
அதிமுக கூட்டணி பலவீனமாக இருக்கிறது – அமைச்சர் தா.மோ. அன்பரசன்!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இது பேசுபொருளாக மாறிய நிலையில் அதிமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால் இபிஎஸ் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளார்.
-
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வழக்கு.. விஜய் பதிலளிக்க உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தொடர்பான வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியானது தங்களின் சங்கத்தின் நிறத்தோடு ஒன்றியிருப்பதாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. திருச்சி சிவா விளக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவா மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெறுமதிப்பும் கொண்டவன் நான் என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவன்.. திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் படிக்க
-
Dr Ramadoss: ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்.. ராமதாஸிடம் தனிப்படை போலீசார் விசாரணை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தான் இருக்கும் இருக்கைக்கு அடியில் அந்த கருவி இருந்ததாக ராமதாஸ் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். முதற்கட்டமாக ராமதாஸிடம் விசாரணை நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
World Snake Day: வீடுகளில் பாம்பு நுழைந்து விட்டால் வனத்துறை அழைக்க புதிய செயலி
ஜூலை 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினத்தையொட்டி முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இர்னடு நாட்கள் பயிற்சி பட்டறை தொடங்கியது. இப்படியான நிலையில் வீடுகளில் பாம்பு நுழைந்து விட்டால் அதை பிடிப்பதற்கும், வனத்துறையை அழைப்பதற்கும் ஏதுவாக நாகம் என்ற செயலியை தமிழக அரசின் வனத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நிச்சயம் மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்.. ஆளுநருக்கு வைரமுத்து பதில்!
ஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் 944ஆம் திருக்குறள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகத்தில் இல்லாத குறளை யாரோ எழுதியிருக்கிறார்கள். யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார். ராஜ்பவனில் ஒரு திருவள்ளுவர் தங்கியுள்ளார் போலும். அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள். எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் என கவிப்பேரரசு வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
கூட்டு பிரார்த்தனை – கோர்ட் விளக்கம்
மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டு பிரார்த்தனை என்றால் வீட்டுக்குள் இருக்கலாம் என்றும், மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கோர்ட் குறிப்பிட்டுள்ளது
-
10 மணிக்கு மீட்டிங் – துரைமுருகன் அறிவிப்பு
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்பு
காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் .
– கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு#DMK pic.twitter.com/U1FfSq4GB8
— DMK (@arivalayam) July 16, 2025
-
DMK Meeting : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இன்று, ஜூலை 17 2025 ஆம் தேதி சென்னை திமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை – சீமான் கேள்வி
மகளிர் உரிமைத்தொகை விடுபட்டது குறித்து கேள்வி எழுப்பிய சீமான், இத்தனை நாட்கள் விடுபட்டது திமுக அரசுக்கு தெரியாதா என்றார். மேலும், இத்தனை பேருக்கு விடுபட்டது என இப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்
-
Seeman Press Meet : திமுகவிடம் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட சீமான்
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், திமுகவுக்கு பல கேள்விகளை முன்வைத்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்தும், மகளிர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்
-
AIADMK : அதிமுக கூட்டணியில் சேர நேரடி அழைப்பு
ஜூலை 16 2025 தேதியான நேற்று சிதம்பரத்தில் மக்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது கம்யூனிஸ்ட் மட்டும் விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் சேர நேரடியாக அழைப்பு விடுத்தார். அவர்கள் திமுக கூட்டணியில் அசிங்கப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு பேசினார்.
-
அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த ஈபிஎஸ்
அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், பாஜக அதிமுக கூட்டணிக்கு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வர வேண்டுமென அழைப்பு விடுத்தார்
-
நாளையும் மழைக்கு வாய்ப்பு
ஜூலை 18 2025 தேதியான நாளை கோவை, நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Chennai Weather Today: சென்னையில் மழைக்கு வாய்ப்பு
வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது