சாதி ரீதியில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு… சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Madras High Court : சாதி ரீதியான அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதுக்குடி அய்யனார் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரியலூர் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை 17 : சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனால் கோயில் பட்டியலின மக்கள் நுழைய அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதுக்குடி அய்யனார் கோயிலில் இரும்பு கேட் பொருத்தப்பட்டதாகவும், பட்டியலின மக்கள் கேட் வாயிலுக்கு வெளியே இருந்து மட்டுமே தெய்வத்தை வணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பாகுபாடு இருந்தபோதிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு பயந்து அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையீடவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதி ரீதியில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், இந்த வழக்கு அவர் முன்னிலையில் 2025 ஜூலை 17ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து வகுப்பு மக்களும், சாதி வேறுபாடின்றி, தற்போது நடைபெறும் வருடாந்திர திருவிழா உட்பட, எல்லா நேரங்களிலும் கோயிலுக்குள் நுழைந்து தெய்வத்தை வழிபட அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
Also Read : வீடுகளில் அனுமதியின்றி கூட்டுப் பிரார்த்தனை நடத்தக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..




மேலும், ஒரு பிரிவினர் கோயிலுக்குள் நுழைவதை யாராவது தடுத்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்குக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மேலும், நீதிபதி கூறுகையில், சாதியின் அடிப்படையில் யாருக்கும் கோயில் நுழைவு மறுக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய விரும்பிய பல தலைவர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்ய உரிமை உண்டும். சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டால் அது குற்றமாகும். இதனால், சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.
Also Read : கிண்டியில் பசுமை பூங்கா அமைக்க தடை.. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என கூறினார். தொடர்ந்து, புதுக்குடி அய்யனார் கோயிலுக்குள் பட்டியல் சாதியினர் நுழைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரியலூர் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.