ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்-கடன் ரத்து..அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதி..எடப்பாடி போட்ட லிஸ்ட்!
AIADMK 2nd Phase Election Promises: அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த வாக்குறுதியில் 3 இலவச சிலிண்டர்கள், கல்விக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ரத்து உள்ளிட்ட 6 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று புதன்கிழமை ( பிப்ரவரி 4) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகித்து மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதிகள், டிஜிட்டர் பிரசாரம் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, வருகிற சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவின் 2- ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில்:
மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. டிஜிட்டல் பிரச்சாரம் குறித்து முக்கிய ஆலோசனை..
- தமிழகத்தில் மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- குடும்ப அட்டைதாரருக்கு ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று எதிர்பாராதவிதமாக உயிரிழக்கும் மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெற்ற கல்வி கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும். அந்தச் செலவை அரசே ஏற்கும்.
- மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வங்கியில் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
- இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுகவின் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார். இதில், கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், பட்டியல் இன பெண்கள் திருமணமாகி செல்லும்போது, சொந்தமாக வீடு கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.




வாக்காளர்களை கவரும் வகையில்…
இதைத் தொடர்ந்து, தற்போது 2-ஆவது கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை வசமாக்கும் வகையில் தி. மு. க., அ. தி. மு. க உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கேற்றவாறு தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்து வருகின்றன. இதில், முன்கூட்டியே அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. தற்போது வரை அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: என் கனவு, என் எதிர்காலம் திட்டம்.. விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..