கிண்டியில் பசுமை பூங்கா அமைக்க தடை.. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..
Guindy Race Course Green Park: கிண்டியில் பசுமை பூங்காவை மேம்படுத்த இன்னும் நிலம் சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்படாத நிலையில், ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்க கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, ஜூலை 16, 2025: சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் 118 ஏக்கர் பரப்பளவில் ஏரியை உருவாக்க முடியும் இதனால் மழை பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம் எனவே பசுமை பூங்க அமைப்பது தொடர்பாக தமிழக அரசும் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடமானது ஆங்கிலேயர் காலத்தில் குதிரை பந்தயத்திற்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் 1945 ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு இந்த இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது இந்த குத்தகை காலம் என்பது என்பது 2044 ஆம் ஆண்டு முடிவு வருகிறது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் நிலத்தை கையப்பட்டுத்திய அரசு:
இந்த நிலையில் 1970 ஆம் ஆண்டு முதல் ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் வாடகை செலுத்தவில்லை எனவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ரூபாய் 730 கோடியே 86 லட்சத்தை நிலுவைத் தொகை செலுத்தவும் இல்லை என்றால் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது.
Also Read: குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
அதனைத் தொடர்ந்து இந்த ரேஸ் கோர்ஸ் பகுதியில் 118 ஏக்கர் பரப்பளவில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான டெண்டரை கோரியது. முன்னதாக சென்னை கிண்டிக்கு அருகில் இருக்கக்கூடிய வேளச்சேரி பகுதியில் மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுவதாகவும், ஏரிகளில் கழிவுநீர் கலப்பதாகவும் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்த நிலம் ஒரு தீர்வாக அமைக்கலாம் என சமூக ஆர்வலர்களால் பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு:
இந்நிலையில் சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பான வழக்கு ஜூலை 15 2025 தேதியான நேற்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கர் இடத்தில் ஏரி உருவாக்க முடியும் இதனால் மழை பாதிப்பிலிருந்து வேளச்சேரி பகுதியை பாதுகாக்க முடியும் எனவும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்க கூடாது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட இருந்தது.
பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது:
நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணையின் போது பசுமை பூங்காவை மேம்படுத்துவதற்காக இந்த நிலம் சென்னை மாநகராட்சி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு முறையாக தங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தபடி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக்கூடாது என குறிப்பிட்ட வழக்கு விசாரணையை 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.