திருவாதிரை நட்சத்திரமா நீங்கள்? – வணங்க வேண்டிய கோயில் இதுதான்!
அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள அபயவரதீஸ்வரர் கோயில், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ராகு-கேது தோஷ நிவர்த்திக்கும், ஆயுள் விருத்திக்கும் இங்கு வழிபாடு செய்யலாம். திரிநேத்திர சக்தி கொண்ட இக்கோயில், எமபயம் நீக்கும் தலமாகவும் போற்றப்படுகிறது. இக்கோயில் பற்றி நாம் காணலாம்.

பொதுவாக ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளது. குறிப்பாக நவக்கிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கான வழிபாட்டு தலங்கள் பூலோகத்தில் அமையப் பெற்றிருப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த வகையில் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கான கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த திருக்கோயிலானது தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக அபய வரதீஸ்வரரும், அம்பாளாக சுந்தர நாயகியும் அருள்பாலிக்கின்றனர். மேலும் இத்தலத்தில் தல விருட்சமாக வில்வம், வன்னி மரம் உள்ளது. இந்த அபய வரதீஸ்வரர் கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இக்கோயிலானது பட்டுக்கோட்டை தாலுகாவில் அமையப் பெற்றுள்ளது.
கோயிலின் தல வரலாறு
முன்பொரு காலத்தில் தேவர்களும் முனிவர்களும் அசுரர்களால் துரத்தி அடிக்கப்பட்ட நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அனைவரும் திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பொதுவாக சிவபெருமான் பிரதோஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் உலா வரும் லோகங்களில் இந்த நட்சத்திர மண்டலமும் ஒன்றாகும். இந்த இடத்திற்குள் நுழைய அசுரர்கள் பயப்படும் நிலையில் அங்கு சென்று சரணடைந்தவர்களை சிவன் அபயம் தந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கையாகும். இதனால் தான் சிவனுக்கு அபய வரதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது இங்கு திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த நாளில் வழிபாடு செய்தால் மிகுந்த பலனை தரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பரணி நட்சத்திரமா நீங்கள்?.. கட்டாயம் வழிபட வேண்டிய கோயில் இதுதான்!
கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
இந்தக் கோயில் ஆனது திரி நேத்திர சக்தி கொண்ட தலமாக அறியப்படுகிறது. அதனால் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்லாது ராகு கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் அடிக்கடி வந்து வழிபட வேண்டிய கோயிலாக பார்க்கப்படுகிறது. மேலும் திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு அடுத்தபடியாக எம பயம் நீக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ஆயுள் விருத்திக்காக வேண்டுபவர்கள் ஆகியோர் இங்கு வந்து வழிபாடு செய்யலாம் என சொல்லப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அதிவீரராமபாண்டியன் மன்னர் இந்தக் கோயில் இறைவனை வழிபட்டு பல திருப்பணிகளை செய்துள்ளார். அதனால் இந்த இடம் ஆரம்ப காலத்தில் திரு ஆதிரை பட்டினமாக இருந்து அதிவீரராமன் பட்டினமாக மாறி தற்போது அதிராம்பட்டினமாக அறியப்படுகிறது.
இதையும் படிங்க: மகம் நட்சத்திரமா நீங்கள்.. இந்த கோயிலில் வழிபட்டால் பலன்கள் ஏராளம்!
சுந்தர நாயகி அம்பாள் தெற்கு நோக்கி கடலைப் பார்த்து இருப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரையும் பெற்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சித்தர்கள் அனுபவ வடிவில் வழிபாடு செய்வதாக நம்பிக்கை உள்ளது. சிவனுக்குரிய அத்தனை விஷேச தினங்களும் இக்கோயிலில் வெகு விமரிசியாக கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்
பொதுவாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகி உறவை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பார்கள். சாமர்த்தியமாக சம்பாதிப்பது எப்படி என்ற வலியை அறிந்த இவர்கள் திட்டமிட்டு முறையாக செலவழிக்கவும் செய்வார்கள். கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் தவறு நேர்ந்தால் அதனை தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)