கிட்னி விற்பனை மோசடி.. நாமக்கல்லில் அரங்கேறும் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி!
Namakkal Kidney Scam : நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி விற்பனை மோசடி நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்து வருவதாக தெரிகிறது. சிறுநீரகங்களுக்கு ரூ.2 முதல் 3 லட்சம் வரை தருவதாக கூறி, இந்த மோசடி அரங்கேறி வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நாமக்கல், ஜூலை 17 : நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனை மோசடி நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து, கிட்னி விற்பனை மோசடி அரங்கேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, பள்ளிபாளையம், அக்ரஹாரம், வெப்படை, குமாரபாளையம் பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் கிட்னினை இடைத்தரகர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.
கிட்னி விற்பனை மோசடி
அதாவது, பெங்களூரு, கொச்சி போன்ற பெரு நகரங்களில் அவர்களை அழைத்து சென்று இடைத்தரகர்கள் மூலம் கிட்னி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 முதல் 3 லட்சம் வரை தருவதாக கூறி, இதற்கு ஒப்புக் கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
Also Read : திருமணமான ஒரு மாதம்.. மனைவி, தாயை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்.. பகீர் பின்னணி!




கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு, அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல்லில் அரங்கேறும் சம்பவம்
இதில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சில விசைதறி தொழிலாளர்களுக்கு முன்பணம் போக, மீதமுள்ள பணத்தை வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைத்து கிட்னி மோசடி நடைபெறும் வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read : பிரபல ரவுடி கொலை.. காரில் வைத்து கும்பல் செய்த கொடூரம்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருக்கிறார்.