Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருப்பத்தூர் ரயில் வழக்கில் அதிரடி தீர்ப்பு: கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை!

Hemaraj Life Sentence: கர்ப்பிணி பெண்ணை ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு 32 நாளில் தீர்வு பெற்றது.

திருப்பத்தூர் ரயில் வழக்கில் அதிரடி தீர்ப்பு: கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை!
கோப்புப்படம் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Jul 2025 19:06 PM

திருப்பத்தூர் ஜூலை 14: திருப்பத்தூர் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய ஹேமராஜ் என்பவருக்கு, நீதிமன்றம் 3 ஆயுள் தண்டனையுடன், சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் கோவை-திருப்பதி ரயிலில் கடந்த 2025 பிப்ரவரி 6-ம் தேதி நடைபெற்றது. பெண் பலத்த காயங்களுடன் உயிரிழப்பும் ஏற்பட்ட நிலையில், 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹேமராஜ் மீது இதற்கு முந்தைய இரண்டு பெரிய குற்றச்சாட்டுகளும் இருந்தன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு 32 நாட்களில் தீர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

திருப்பத்தூர் மாவட்டம், கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் கடந்த 2025 பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற கொடூர சம்பவம் தற்போது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 36 வயது பெண், 4 மாத கர்ப்பிணியாகவும், திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்தவராகவும் இருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக தனது சொந்த ஊருக்கு செல்லும் போதுதான் இந்த துயர சம்பவம் நடந்தது.

பாலியல் தொந்தரவு, தாக்குதல்: மர்ம நபரின் கொடூர செயல்

குடியாத்தம்-கே.வி.குப்பம் பகுதியில் ரயில் சென்றபோது, அந்த பெண் கழிப்பறைக்கு சென்றதையடுத்து, ஹேமராஜ் எனும் இளைஞர் அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்து, கூச்சலிட்டதை அடுத்து அவரது வலது கையை முறித்துவிட்டு, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். இதனால், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, கரு கலைந்தது.

குற்றவாளியின் பின்னணி

ஹேமராஜ் என்ற அந்த நபர், வேலூர் மாவட்டம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர். இவரது மீது ஏற்கனவே ரயிலில் கைப்பேசி பறிப்பு மற்றும் பெண் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு, இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

Also read: புதுக்கோட்டையில் அதிர்ச்சி.. பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.. அதிரடி நடவடிக்கை

நீதிமன்ற தீர்ப்பு: 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை சிறை

இக்குற்றச் சம்பவத்தில் ஹேமராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி, 2025 ஜூலை 11ஆம் தேதி அவரை குற்றவாளி என அறிவித்து, இன்று (2025 ஜூலை 14) அவருக்கு 3 ஆயுள் தண்டனை, மேலும் சாகும் வரை கடுங்காவல் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு

அத்துடன், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அதனை தமிழக அரசு மற்றும் ரயில்வே இணைந்து செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இத்தொகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.

32 நாட்களில் தீர்ப்பு

இந்த வழக்கு தொடரப்பட்டு மிகச் சுருக்கமான 32 நாட்களிலேயே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இது நாட்டில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிரான விரைவு நீதிக்கான ஓர் முக்கிய முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.