கட்டட அனுமதி நிராகரிப்பா? இனி ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம்
Online Building Permit Appeals : கட்டட அனுமதி தொடர்பான முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இனி அலுவலகங்களுக்கு நேரில் அலைய வேண்டியதில்லை. இணையதளம் வழியாகவே மேல்முறையீட்டைத் தாக்கல் செய்து, அதன் நிலையைக் கண்காணிக்கும் புதிய இணையவழி சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, அக்டோபர் 31 : கட்டட அனுமதி (Building Permits) மற்றும் மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பான அதிகாரிகளின் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இனி அலுவலகங்களுக்கு நேரில் அலைய வேண்டியதில்லை. இணையதளம் வழியாகவே மேல்முறையீட்டைத் தாக்கல் செய்து, அதன் நிலையைக் கண்காணிக்கும் புதிய இணையவழி சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி 2026 அக்டோபர் 27 முதல் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக நகர் ஊரமைப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் மேல்முறையீடு செய்யலாம்!
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 79ன் கீழ், கட்டட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல் தொடர்பாக அதிகார அமைப்புகள் வழங்கும் ஆணைகளையும் முடிவுகளையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், அத்தகைய மேல்முறையீடுகளை விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்றே சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மேல்முறையீடுகளைத் தாக்கல் செய்யவும், கண்காணிக்கவும், தீர்வு காணவும் ஒருங்கிணைந்த இணையதள வசதி இல்லை. மேல்முறையீட்டு முடிவுகளைப் பொதுவெளியில் வெளியிடும் நடைமுறையும் இல்லை.
இதையும் படிக்க : 30,000 பேருக்கு ஆடு வழங்க நிதி ஒதுக்கீடு – வெற்றி ஆடு வளர்ப்பு திட்டத்துக்கு ஒப்புதல்




புதிய முறையில் என்னென்ன வசதிகள்?
இந்தக் குறைகளைப் போக்கும் வகையில், ஒற்றைச்சாளர இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட புதிய இணையவழி மேல்முறையீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியில் தாக்கல் செய்யலாம். மேல்முறையீடு, தொடர்புடைய அசல் விண்ணப்பத்துடன் தானாகவே இணைக்கப்படும். மேல்முறையீட்டின் நிலையை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம். அதிகாரிகளுடனான தகவல் தொடர்பு மின்னணு முறையில் நடைபெறும். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தணிக்கைப் பதிவேடுகள் பராமரிக்கப்படும். மேல்முறையீட்டு ஆணைகள் இணையவழியிலேயே வழங்கப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்படும்.
பொதுமக்களுக்கு என்ன பயன்?
கட்டட அனுமதி அல்லது மனைப்பிரிவு ஒப்புதல் மறுக்கப்பட்டவர்கள், அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே மேல்முறையீடு செய்யலாம். தங்கள் மேல்முறையீடு எந்த நிலையில் உள்ளது என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேல்முறையீட்டு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்படுவதால், முடிவுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். இதன் மூலம், மாநிலம் முழுவதும் மேல்முறையீடுகள் எளிமையாகவும் வெளிப்படையாகவும் கையாளப்படுவது உறுதி செய்யப்படும் என நகர் ஊரமைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள், 2019-இல், கட்டட உயரம், வணிகப் பயன்பாடு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு திருத்தங்களைச் செய்து, தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டிருந்தது. சாலையையொட்டிய தளங்கள், ஐடி நிறுவனங்களுக்கான வாகன நிறுத்துமிடம், ஓட்டல்கள், திறந்தவெளிச் சமையலறை, கழிப்பறை மற்றும் கைகழுவும் தொட்டி தொடர்பான விதிகளில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை அள்ளிக் கொடுத்த CM விஜய்.. எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையில் பத்திரப்பதிவுத் துறையில் அமைக்கப்படவுள்ள மாதிரி பதிவு மையங்கள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டம் பதிவுத் துறையின் சட்டப்பூர்வப் பொறுப்புகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.