அடுத்தடுத்து கைதிகள் தப்பிப்பு.. இதை முதல்ல செய்யுங்க.. சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் கறார் உத்தரவு!
Prison Department ADGP Shankar : தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி சென்ற விவகாரம் தொடர்பாக தேனி சிறையில் துறையின் ஏடிஜிபி சங்கர் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து பேட்டி அளித்தார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழகத்தில் புழல் மத்திய சிறை, தேனி மாவட்ட கிளை சிறை மற்றும் கோவை சிறை வளாகத்தில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பிய சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில், தேனி சிறையில் கைதி தப்பி சென்ற விவகாரம் தொடர்பாக சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்ட சிறையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இது போன்ற பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எந்த பகுதிகளில் எல்லாம் குறைபாடுகள் இருக்கின்றதோ அவை அனைத்தும் சரி செய்யப்படும்.
சிறை பாதுகாப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள்
சிறையை முறையாக வழிநடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 100 சதவீதம் அமல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்ட கிளை சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஏற்கனவே கூறிவிட்ட காரணத்தால் அதை மீண்டும் கூற விரும்பவில்லை. குறைகளை நிவர்த்தி செய்ய போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பின்பற்றினால் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். கோவை சிறையில் இருந்து யாரும் தப்பிக்கவில்லை என்று ஏடிஜிபி சங்கர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: புழலில் போக்சோ வழக்கில் கைதான நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்.. காவல் துறையின் அலட்சியத்தால் பரபரப்பு!!




புழல், தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி சென்றனர். இதை தொடர்ந்து, தேனி மாவட்ட கிளை சிறையில் வலிப்பு வந்தது போல நடித்து சிறை காவலர்களை தாக்கி விட்டு ஒரு மாற்றுத்திறனாளி கைதி உள்பட 17 கைதிகள் சிறையில் பிரதான வாயில் வழியாக தப்பி சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
கோவை சிறை வளாகத்தில் கைதி தப்பியோட்டம்
இதைத் தொடர்ந்து, சுமார் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி சென்ற கைதிகள் அனைவரும் அடுத்தடுத்து அதிரடியாக பிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, அந்த கைதிகள் மற்றும் தப்பி செல்வதற்கு மூளையாக செயல்பட்ட கைதி ஆகியோரை வெவ்வேறு மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் கோவையில் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி திடீரென தப்பி சென்றது மீண்டும் பரபரப்பை கூட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கைது செய்த கையோடு தப்பியோடிய கைதி.. சம்பவ இடத்தில் என்ன நடந்தது? கோவை போலீசாரின் அதிரடி விளக்கம்!