தூய சக்தி என்று சொன்னால் மட்டும் போதாது.. மாற்றம் என்பது நிர்வாக சீர் திருத்தத்தில் இருக்க வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு வானதி கிளாஸ்!
BJP Senior Leader Vanathi Srinivasan : தூய சக்தி, மாற்றம் என்று கூறினால் மட்டும் போதாது ரீல்ஸ் வெளியிடுவதை விட்டுவிட்டு அரசு நிர்வாகத்தில் காட்ட வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் விஜய்யை பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.
கோயம்புத்தூரில் மக்கள் சேவை மையம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன வானதி சீனிவாசன் பங்கேற்று தந்தையை இழந்த 150 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கோவை, சென்னை உள்ளிட்ட தொழில நகரங்களில் கடந்த 2 மாதங்களாக அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. தீபாவளி காலத்தில் கடைவீதிகளிலேயே மின்தடை ஏற்படுவது சிறிய வணிகர்களை பெருமளவு முடக்கி உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஐபிகள் தரிசனம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படுகிறது.
தமிழகத்தில் 3 மாத ஜிஎஸ்டி வசூல் குறைவு
மின்தடை விவகாரத்தில் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று துறை அமைச்சரே கூறுவது அரசின் கட்டுப்பாடற்ற நிர்வாகத்தை காட்டுகிறது. கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தோல்வி அடைந்ததற்கு மின்வெட்டு தான் முக்கிய காரணம். இதனை தவெக அரசு நினைவில் கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மத்திய அரசின் உதவியை பெற்று மின் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் 3 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து வருகிறது.
மேலும் படிக்க: இடைத்தேர்தல் தொகுதியில் ஷோ காட்டும் முதல்வர்.. தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!




தூய சக்தி என்ற கூறினால் மட்டும் போதாது
தீபாவளி நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வும், கள்ளச் சந்தை பதுக்கல்களும் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுதல் வேண்டும். சிறையில் இருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பி செல்லும் சம்பவங்கள் சட்டம்- ஒழுங்கின் பலவீனத்தை வெளிப்படுத்தி உள்ளது. தூய சக்தி, மாற்றம் என்று முதல்வர் விஜய் பேசினால் மட்டும் போதாது. அந்த மாற்றங்கள் ரீல்ஸ்களில் இல்லாமல் மக்களுக்கு செய்யும் பணிகளிலும், நிர்வாக சீர்திருத்தங்களிலும் இருத்தல் வேண்டும். முதல் முறை ஆட்சி பொறுப்புக்கு வருபவர்களுக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.
மக்களுக்கான தீவிர அர்ப்பணிப்பு இருத்தல் வேண்டும்
மக்களுக்கு தீர்வை கொடுப்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது. நொய்யல் ஆற்றில் இன்றும் புட்டு விக்கி உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் கலப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. அரசு நிர்வாக மட்டத்தில் இன்னும் லஞ்சம் ஒழிக்கப்படவில்லை. அரசியல் களத்துக்கு நடிகர் தனுஷ் சொல்லிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம். இதில், குறிப்பிட்ட சித்தாந்தமும், மக்களுக்கான தீவிர அர்ப்பணிப்பும் இருக்கும்போதுதான் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “எனக்கு ஒரு முத்தம் தாயேன்” திருப்பூரில் ரவுடி மனைவியிடம் அடம்பிடித்த போலீஸ்.. Missing புகாரால் வெளிவந்த ஏட்டுவின் சேட்டை!