விழுப்புரத்தில் விவசாயியை ஆபாசமாக திட்டிய மருத்துவர்.. கால்நடை துறை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு.. என்ன நடந்தது!
Minister Kamali Latest Pressmeet : விழுப்புரத்தில் விவசாயியை கால்நடை உதவி மருத்தவர் சங்கரநாராயணன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் துறை அமைச்சர் கமலி மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
விழுப்புரம் மாவட்டத்தில் பசு மாட்டுக்கு சிகிச்சை அளிக்க சென்ற விவசாயியை பணியில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சங்கரநாராயணன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக கால்நடைத்துறை அமைச்சர் கமலி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரிடம் பணியில் இருந்த உதவி மருத்துவர் சங்கரநாராயணன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி உள்ளார். இந்த விவகாரத்தில் அவரை சஸ்பெண்ட் செய்து துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விவசாயியிடம் கால்நடை உதவி மருத்துவர் அவ்வாறு நடந்து கொண்டதற்காக துறை அமைச்சர் என்ற முறையில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம்
வரும் காலங்களில் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது. கிராம மக்கள் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம் என்று தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு கிராமத்தில் வசித்து வருபவர் சதாசிவம் ( 28 வயது). விவசாயம் பார்த்து வரும் இவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தனது பசு மாட்டை அதே பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சங்கரநாராயணன் பசு மாட்டிற்கு சிகிச்சை அளித்தார்.




மேலும் படிக்க: இடைத்தேர்தல் தொகுதியில் ஷோ காட்டும் முதல்வர்.. தவெக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிச்சாச்சு.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
விவசாயியை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த மருத்துவர்
அப்போது மருத்துவர் அளித்த சிகிச்சை குறித்து விவசாயி சதாசிவம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதில், திடீரென ஆத்திரம் அடைந்த கால்நடை உதவி மருத்துவர் சங்கரநாராயணன் விவசாயி சதாசிவத்தை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போனில் மறைமுகமாக வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கால்நடை மருத்துவரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
View this post on Instagram
கால்நடை உதவி மருத்துவர் பணியிடை நீக்கம்
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் மோகன் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், அறிக்கையை தயார் செய்யப்பட்டு சென்னை கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கால்நடை உதவி மருத்துவர் சங்கரநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கால்நடைத் துறை இயக்குனர் கிருஷ்ணன் உன்னி பிறப்பித்திருந்தார்.
மேலும் படிக்க: தூய சக்தி என்று சொன்னால் மட்டும் போதாது.. மாற்றம் என்பது நிர்வாக சீர் திருத்தத்தில் இருக்க வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு வானதி கிளாஸ்!