ஏற்காட்டில் வானில் பறந்தபடி உணவு சாப்பிடலாம்.. நவம்பர் 4 முதல் புதிய வசதி அறிமுகம்!
Yercaud Sky Dine Launch : சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் ஸ்கைபார்க் ஏற்காடு நிறுவனம் சார்பில் ஸ்கை டைன் என்ற சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சேலம், அக்டோபர் 31 : தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் (Yercaud), சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. மிக உயரத்தில் அமர்ந்து, சுற்றிலும் உள்ள மலைகளின் அழகை ரசித்தபடி உணவு சாப்பிடும் வகையில் ஸ்கை டைன் என்ற புதிய சேவை 2026 நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டில் வானில் பறந்தபடி உணவு சாப்பிடலாம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. குளிர்ச்சியான காலநிலை, பசுமையான மலைகள், ஏரி மற்றும் இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
இதையும் படிக்க : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.. 1800 பேர் மீதான கிரிமினல் வழக்குகள்.. திரும்ப பெற தவெக அரசு உத்தரவு!




இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் ஸ்கைபார்க் ஏற்காடு நிறுவனம் சார்பில் ஸ்கை டைன் என்ற சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வசதி வரும் 2026 நவம்பர் 4 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த ஸ்கை டைன் சேவையில் தரையில் இருந்து உயரத்தில் அமைக்கப்படும் பிரத்யேக தளத்தில் அமர்ந்து உணவருந்த முடியும். இதற்காக ராட்சத கிரேன் உதவியுடன் உணவருந்தும் தளம் மேலே உயர்த்தப்படும். அந்தத் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஏற்காட்டின் மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். குறிப்பாக, சுற்றிலும் 360 டிகிரி கோணத்தில் இயற்கையைப் பார்த்தபடி உணவருந்தும் வகையில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 16 பேர் பயணிக்கலாம்
ஸ்கை டைன் சேவையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 16 பேர் அமர்ந்து உணவருந்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை மேலே சென்று வருவதற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 15 நிமிடங்களில் பயணிகள் உயரத்தில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கலாம். அப்போது அவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான உணவக அனுபவத்தில் இருந்து மாறுபட்டு, உயரத்தில் அமர்ந்து உணவு சாப்பிட விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த வசதி கொண்டுவரப்படுகிறது.
முன்பதிவு கட்டாயம்
ஸ்கை டைன் சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, இந்த வசதியை பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சுற்றுலாக் குழுவினர் ஒன்றாக இந்த அனுபவத்தை பெற முடியும். மேலும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண நாள் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவும் ஸ்கை டைன் தளத்தை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்தடுத்து கைதிகள் தப்பிப்பு.. இதை முதல்ல செய்யுங்க.. சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் கறார் உத்தரவு!
உயரத்தில் அமர்ந்து உணவருந்தும் வசதி என்பதால் பயணிகளின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்கைபார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு பெல்ட்டுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அமர்ந்திருக்கும் தளம் கிரேன் உதவியுடன் உயர்த்தப்படும் நிலையில், அதன் இயக்கத்தை தகுதிவாய்ந்த பொறியாளர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.