டிக்கெட் கட்டணம் ரூ.250, கிரிக்கெட்டுக்கு அனுமதி… முதல்வர் விஜய்யிடம் திரையரங்க உரிமையாளர்கள் வைத்த 9 கோரிக்கைகள்
Theatre Owners Nine Demands : திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும், திரையரங்குகளில் கிரிக்கெட் ஒளிபரப்ப அனுமதி என்பது உள்பட 9 கோரிக்கைகளை, தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முதல்வர் விஜய்யிடம் முன்வைத்துள்ளது
சென்னை, அக்டோபர் 31 : இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தானாக 10% கட்டண உயர்வு, காலை 6 மணி முதல் காட்சிகள், கிரிக்கெட் (Cricket) திரையிட அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முன் வைத்துள்ளது. மேலு் ஓடிடி காரணமாக திரையரங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு, விலைவாசி உயர்வால் திரையரங்குகள் பாதிப்பு எனவு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை ரூ.150-லிருந்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 9 கோரிக்கைகளை, தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முதல்வர் விஜய்யிடம் முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டால், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் 67 சதவிகிதம் வரை உயரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : வங்கக்கடலில் உருவாகும் புயல்.. நவம்பர் 2 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!




முதல்வர் விஜய்யிடம் உரிமையாளர்கள் சங்கம் 9 கோரிக்கைகள்
மின்கட்டணம், சொத்து வரி, ஊழியர்களின் ஊதியம், பராமரிப்புச் செலவுகள் ஆகியவை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், ஓடிடி தளங்களின் போட்டியாலும், திரையரங்குகளின் செயல்பாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சிக்கல்களை சமாளிக்கும் வகையில் முதல்வர் விஜய்யிடம் 9 கோரிக்கைகள் முன்வைத்துள்ளனன.
- அதன் படி அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை ரூ.150லிருந்து ரூ.250 ஆக உயர்த்த வேண்டும்.
- ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும், டிக்கெட் கட்டணத்தைத் தானாகவே 10 சதவிகிதம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
- ஒவ்வொரு டிக்கெட்டுக்குமான திரையரங்கப் பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6லிருந்து ரூ.10 ஆக உயர்த்த வேண்டும்.
- தகுதியுள்ள திரையரங்குகளை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் சேர்த்து, அவற்றுக்குக் குறைந்த மின்கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- டிஜிட்டல் புரொஜெக்டரை இயக்க, உரிமம் பெற்ற ஆபரேட்டர் கட்டாயம் என்ற விதியை நீக்க வேண்டும்.
- திரையரங்குகளுக்கான சி-படிவம்’ உரிமத்தை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும்.
- ஏற்கெனவே உள்ள திரையரங்க வளாகங்களில், கூடுதல் திரைகள் அமைப்பதற்கான அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
- கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகளைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க வேண்டும்.
- திரையரங்குகளின் செயல்பாட்டு நேரத்தை, தற்போதைய காலை 9 மணி – நள்ளிரவு 2 மணி என்பதற்குப் பதிலாக, காலை 6 மணி – நள்ளிரவு 2 மணி என நீட்டிக்க வேண்டும். எனினும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் என்ற கட்டுப்பாடு தொடரலாம்.
இந்தக் கோரிக்கைகள் குறித்து விரிவாக விளக்குவதற்காக, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரைச் சந்திக்கவும் சங்கம் அனுமதி கோரியுள்ளது.
இதையும் படிக்க : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,750 கோடி கடன் வழங்க இலக்கு.. தமிழக அரசின் அதிரடி நிதி ஒதுக்கீடு!!
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு அதிகாலை காட்சியின்போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.