செஞ்சி 7 வயது சிறுமி மாயமான வழக்கில் தொடரும் மர்மம்.. 20 நாட்களை தாண்டிய தேடுதல் வேட்டை!
Gingee 7-Year-Old Girl Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில் 20 நாட்கள் கடந்தும் எந்தத் துப்பும் துலங்காததால் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல்களைக் கொண்டு போலீசார் தீவிர டிஜிட்டல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம், அக்.31: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு என்பவரின் 7 வயது இளைய மகளான ஹேமலதா கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி தனது ஏழாவது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளார். அன்று இரவு தனது தாயார் பவானி மற்றும் பாட்டி சாந்தி ஆகியோருடன் வழக்கம்போல் உறங்கச் சென்ற சிறுமி, மறுநாள் அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலையில் திடீரெனக் காணாமல் போனது குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒரு சிறுமி மர்மமான முறையில் மாயமான இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் கண்ணீரை வரவழைத்தது. இது குறித்துச் சத்யமங்கலம் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதையும் படிக்க: “இனி அப்படி நடந்தால் சும்மா விட மாட்டேன்”.. சிறை கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!
காவல்துறை விசாரணையின் தொய்வு:
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி மதிவானன் உத்தரவின் பேரில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகள், விவசாயக் கிணறுகள், ஏரிகள் மற்றும் குட்டைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாகத் தேடப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், உள்ளூர் பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டும் எந்தவிதமான துப்பும் துலங்கவில்லை; குறிப்பாகச் சம்பவ நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது விசாரணையில் பெரும் தடையாக மாறியது. 10 நாட்களுக்கு மேல் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், தமிழக டிஜிபியின் உத்தரவின் பேரில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவு இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையில் 30 பேர் கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை பல கோணங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கோணங்களில் தொடரும் விசாரணை:
வழக்கைத் தீவிரப்படுத்திய சிபிசிஐடி போலீசார், சிறுமியின் தாய், தந்தை, பாட்டி மற்றும் அக்கா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதுடன், சிறுமி படித்த பள்ளியின் வருகைப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். பழைய குற்றவாளியான ராஜதுரை, திடீரெனத் தலைமறைவான சாமியார் மற்றும் பெங்களூரில் சிறுமி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தந்தையின் உறவினர் ஆகியோரிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, சிறுமியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தனியாக வசிக்கும் 75 வயது மூதாட்டி மணிமகள் என்பவர், சிறுமி மாயமான அன்று அதிகாலை 3 மணியளவில் யாரோ இரண்டு முறை தனது வீட்டின் கதவைத் தட்டியதாகப் புதிய தகவலைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்திருக்கலா என்ற கோணத்திலும், வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: சென்னையில் இன்று ‘Zero Tolerance Day’.. போக்குவரத்து விதிகளை மீறினால் வழக்குப்பதிவு! காவல்துறை அதிரடி அறிவிப்பு!
தீவிரமடையும் செல்போன் சிக்னல், டிஜிட்டல் சோதனை:
தரைவழித் தேடுதல் மற்றும் நேரடி விசாரணைகளில் போதிய பலன் கிடைக்காததால், சிபிசிஐடி போலீசார் தற்போது நவீன தொழில்நுட்பமான டிஜிட்டல் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆலம்பூண்டி பகுதியில் ஆக்டிவாக இருந்த செல்போன் டவர் சிக்னல்கள் கைப்பற்றப்பட்டு, அந்த நேரத்தில் இயங்கிய 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சந்தேகத்திற்கிடமான எண்களைக் கண்காணித்து வரும் போலீசார், இந்தத் தொழில்நுட்ப ஆய்வின் மூலம் குற்றவாளிகளை நெருங்க முடியும் என நம்புகின்றனர். இதற்கிடையே, 20 நாட்கள் கடந்தும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், உள்ளூர் மக்கள் மற்றும் கிராமத்தினர் காவல்துறை மீதான நம்பிக்கையை இழந்து வருவதால், எ எப்படியாவது சிறுமீ மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.