AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு.. போலீசிடம் சிக்கிய முக்கிய வீடியோ ஆதாரம்..

Anbil Mahesh School Permission Case: தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளைக் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கிய வீடியோ ஆதாரம் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது.

அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு.. போலீசிடம் சிக்கிய முக்கிய வீடியோ ஆதாரம்..
அன்பில் மகேஷ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Oct 2026 11:33 AM IST

அக்டோபர், 31: தமிழக அரசியல் மற்றும் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், கைதான முக்கியக் குற்றவாளியான அரசகுமார் மற்றும் பிற நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். இடைத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளை டார்கெட் செய்து சுமார் 400 கோடி ரூபாய் வரை இந்த மோசடியில் வசூல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலரும் தங்களது பணத்தை நேரடியாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் தரப்பிடமே வழங்கியதாகக் கூறியிருப்பது வழக்கின் போக்கை மாற்றியுள்ளது.

இதையும் படிக்க: “இனி அப்படி நடந்தால் சும்மா விட மாட்டேன்”.. சிறை கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

சண்முகப்பிரியா வீட்டில் நடந்த சோதனை:

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக, சென்னை காவல்துறை தரப்பிலிருந்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் அமலாக்கத்துறைக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தச் பண மோசடி நெட்வொர்க்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் சண்முகப்பிரியா என்பவரின் வீட்டிலும் குற்றப்பிரிவு போலீசார் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். வசூல் செய்யப்பட்ட பணம் ஏதேனும் அங்கு கைமாறியதா அல்லது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வழக்கில் தொடர்புடைய முக்கியச் சாட்சிகளையும் ஆவணங்களையும் திரட்டிவரும் போலீசார், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தின் வேர்களை முழுமையாகத் தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிக்கிய முக்கிய வீடியோ ஆதாரம்:

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவி வகித்த காலகட்டத்தில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சென்னை காவல்துறையின் கைகளில் சிக்கியுள்ளது இந்த வழக்கின் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த வீடியோவில், அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோரைச் சுட்டிக் காட்டிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் இவர்களிடம் முறையிடுங்கள், உடனடியாகத் தீர்த்து வைக்கப்படும்” என்று வெளிப்படையாகக் கூறியிருப்பது பதிவாகியுள்ளது. இந்த வலுவான வீடியோ ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே காவல்துறையினர் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட நபர்களின் கூட்டுச் சதி குறித்த உறுதியான தடயங்களையும் சேகரித்துள்ளனர்.

இதையும் படிக்க: சென்னை புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. நவ.1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கால அட்டவணை.. முழு விவரம் இதோ!

காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்:

மோசடி செய்யப்பட்ட பெருமளவிலான பணம் எங்கு சென்றது மற்றும் எவ்வாறெல்லாம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே அரசகுமாரின் வங்கி கணக்கிற்குச் சில தனியார் பள்ளிகளிலிருந்து பெரிய அளவில் பணம் செலுத்தப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்த முத்துக்குமார் மற்றும் ஏற்கெனவே கைதான அன்பில் மகேஷ் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறை தரப்புத் திட்டமிட்டுள்ளது. இந்த நால்வர் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்படும் தீவிரக் காவல்கால விசாரணைக்குப் பின்னரே இந்த ரூ. 400 கோடி மோசடியின் முழு பரிமாணமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us