சென்னை புறநகர் ரயில் பயணிகள் கவனத்திற்கு.. நவ.1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கால அட்டவணை.. முழு விவரம் இதோ!
Chennai Suburban Train Time Table: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை மற்றும் வார நாட்களுக்கான ரயில் இயக்க நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், சில வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை, அக்.31: சென்னையின் உயிர்நாடியாக விளங்கும் புறநகர் மற்றும் மாநகரப் பகுதி மின்சார ரயில் சேவைகளில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய கால அட்டவணை (Time Table) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்களும் அலுவலகப் பணியாளர்களும் நம்பிப் பயணிக்கும் இந்த ரயில் சேவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடியான மாற்றங்கள் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன. வார நாட்களுக்கான ரயில் சேவைகளுக்கு நவம்பர் 2-ஆம் தேதியிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்புச் சேவைகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்தும் புதிய அட்டவணை முறைப்படுத்தப்படும் எனத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட கால அட்டவணை மூலம் பயணிகளின் நீண்ட நேரக் காத்திருப்புத் தவிர்க்கப்படுவதுடன், பயண நேரமும் பெருமளவில் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!
சென்ட்ரல் வழித்தடத்தில் முக்கிய மாற்றங்கள்:
குறிப்பாக சென்னை சென்ட்ரல் (மூலக்கொத்தளம் / மூர் மார்க்கெட் வளாகம்) – அரக்கோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் நேரங்களிலும் வழித்தடங்களிலும் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூரிலிருந்து நேரடியாக மூர் மார்க்கெட் வளாகத்திற்குப் புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; அதன்படி மதியம் 12:25 மணிக்குத் திருவள்ளூரிலிருந்து புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1:45 மணிக்கு மூர் மார்க்கெட்டை வந்தடையும். மேலும், முன்பு காலை 7:10 மணிக்கு மூர் மார்க்கெட்டிலிருந்து பட்டாபிராம் வரை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை தற்பொழுது திருவள்ளூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 7:10 மணிக்கு மூர் மார்க்கெட்டில் புறப்படும் இந்த ரயில் 8:30 மணிக்குத் திருவள்ளூரைச் சென்றடையும் என்றும், மறுமார்க்கமாகத் திருவள்ளூரிலிருந்து காலை 8:45 மணிக்குப்புறப்படும் ரயில் 10:20 மணிக்கு மூர் மார்க்கெட் வளாகத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விரைவு ரயில் நிறுத்தங்கள்:
சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான எம்.ஆர்.டி.எஸ். (MRTS) ரயில் சேவைகளைப் பொறுத்தவரை எந்தவிதமான மாறுதல்களும் செய்யப்படவில்லை எனவும், வழக்கமான தற்போதைய கால அட்டவணையிலேயே ரயில்கள் தடையின்றி இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் – அரக்கோணம் வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு மின்சார ரயில்களுக்குக் கூடுதலாகச் சில நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகச் சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் ரயில்கள் பல புதிய நிலையங்களில் நின்று செல்லும் வகையில் வார நாட்களுக்கான புதிய அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்குப் பயண வசதி மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு சம்பவம்.. 45 பவுன் நகை- பணம் கொள்ளை.. திருப்பூரில் தாய், மகன் என குடும்பமே கைது!
பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்துப் பயணிகள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ செயலியான ‘என்.டி.இ.எஸ்.’ (NTES) மூலமாகப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புதிய கால அட்டவணை குறித்த முழுமையான விவரங்களைச் சரிபார்த்து அதற்கேற்பத் தங்களது அன்றாடப் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.