AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அடுத்த தேர்தல் ஆட்டத்திற்குத் தயாராகும் தவெக.. 5 சட்டமன்றத் இடைத்தேர்தல்களை குறிவைத்து முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!

TVK By Election Strategy 2026: விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஐந்து சட்டமன்றத் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிர தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. முதல்வர் விஜய் நேரடியாகக் களமிறங்கி நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, செல்வாக்கு மிக்க முன்னாள் எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.

அடுத்த தேர்தல் ஆட்டத்திற்குத் தயாராகும் தவெக.. 5 சட்டமன்றத் இடைத்தேர்தல்களை குறிவைத்து முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Oct 2026 07:47 AM IST

அக்டோபர், 31: தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த தேர்தல் மோதல்களுக்குத் தயாராகி வரும் நிலையில், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தல்களில் முழுமையான வெற்றியைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போதே தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுப் பெருமிதத்துடன் இருக்கும் ஆளுங்கட்சியான தவெக, இந்த ஐந்து தொகுதிகளிலும் தனது செல்வாக்கை மேலும் பலப்படுத்தும் வகையில் அதிரடியான வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருவது அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் 3,000 சட்ட ஆலோசகர்கள்? தனுஷ் நற்பணி இயக்கத்தின் அடுத்த நகர்வு எனத் தகவல்

புதிய திட்டங்களை அறிவிக்கும் முதல்வர் விஜய்:

ஏற்கனவே கடந்த தேர்தல்களுக்குப் பிறகு சுமார் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்திய முதல்வர் விஜய், இந்த முறையும் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, வரும் நவம்பர் 2-ஆம் தேதி விராலிமலை தொகுதி அடங்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும், நவம்பர் 3-ஆம் தேதி பெருந்துறை தொகுதி அடங்கியுள்ள ஈரோடு மாவட்டத்திலும் அரசு விழாக்களை நேரில் நடத்த உள்ளார். இந்த விழாக்களின் வாயிலாகப் புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதோடு, இடைத்தேர்தலுக்கான வலுவான அரசியல் சமிக்ஞையையும் பொதுமக்களுக்கு வழங்கத் தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தித் துரிதமாக நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கும் கட்சியை முழுமையாகத் தயார்படுத்தும் பணியில் ஆளுங்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

கட்சியில் இணைந்த செல்வாக்கு மிக்க நபர்கள்:

அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா மற்றும் எஸ். ஜெயகுமார் போன்ற முன்னணித் தலைவர்கள் தங்களது சொந்தத் தொகுதிகளில் மிகுந்த தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்வது கட்சிக்கு மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கரும், விராலிமலையில் சி. விஜயபாஸ்கரும் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுத் தங்களது மக்கள் பலத்தை ஏற்கனவே நிரூபித்தவர்கள் என்பதால், அந்தத் தொகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கைப்பற்றத் தவெக இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், திருச்சி கிழக்குத் தொகுதியில் எதிர்க்கட்சியின் முக்கிய முகங்கள் சட்டப் பிரச்சினைகளில் சிக்கியுள்ள சூழலையும், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளில் முந்தைய தேர்தல்களில் பதிவான வாக்கு வித்தியாசங்களையும் சாதகமாகப் பயன்படுத்தி எளிதில் வெற்றி பெற முடியும் எனத் தவெக கணக்கிட்டுள்ளது.

இதையும் படிக்க : மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் எப்படி செயல்படும்? அரசு வெளியிட்ட விரிவான விளக்கம்

தவெகவின் வியூகமும் அரசியல் தாக்கமும்:

வழக்கமான தேர்தல் பிரச்சார உத்திகளைத் தாண்டி, அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமும், வலுவான உள்ளூர் தலைவர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் தேர்தல் களத்தில் எதிரிகளைச் சமாளிக்கத் தவெக திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களது பலவீனங்களிலிருந்து மீள்வதற்குள், ஆளுங்கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தத் துரித நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களத்தில் வியூகங்களை வகுத்துச் செயல்படும் தவெகவின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், எதிர்க்கட்சிகளுக்குக் கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளதோடு, வரவிருக்கும் இடைத்தேர்தல்களின் களத்தை இப்போதே சூடுபிடிக்கச் செய்துள்ளன.

Follow Us