மாதிரி பத்திரப்பதிவு மையங்கள் எப்படி செயல்படும்? அரசு வெளியிட்ட விரிவான விளக்கம்
Tamil Nadu Registration Centres : பத்திரப்பதிவுத் துறையில் அமைக்கப்படவுள்ள மாதிரி பதிவு மையங்கள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டம் பதிவுத் துறையின் சட்டப்பூர்வப் பொறுப்புகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை, அக்டோபர் 30 : பத்திரப்பதிவுத் துறையில் அமைக்கப்படவுள்ள மாதிரி பதிவு மையங்கள் (Model Registration Hubs) எவ்வாறு செயல்படும் என்பது குறித்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. இந்தத் திட்டம் பதிவுத் துறையின் சட்டப்பூர்வப் பொறுப்புகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அல்ல என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மாதிரி பதிவு மையங்கள்
தற்போது, சொத்து அமைந்துள்ள பகுதிக்கான சார்பதிவாளர் அலுவலகங்களிலேயே ஆவணப் பதிவுகள் நடைபெறுகின்றன. சார்பதிவாளர் அலுவலகப் பணிகளை இரண்டாகப் பிரிக்கலாம். பொதுமக்களுக்கான உதவி, சந்தேகங்களுக்கு விளக்கம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை முகப்புச் சேவைகள் என்றும் சட்டங்கள், விதிகள், அரசாணைகளின்படி ஆவணங்களை ஆழமாகப் பரிசீலித்துப் பதிவு செய்தல் ஆகியவை சட்டரீதியான பணிகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
இதில், முகப்புச் சேவைகளுக்குக் கணிசமான முதலீடும் தொடர் பராமரிப்பும் தேவைப்படுகின்றன. பொதுமக்களின் பெரும்பாலான புகார்களும் இந்தப் பிரிவு சார்ந்தே எழுகின்றன. தற்போது சார்பதிவாளர்கள், தங்கள் முதன்மையான சட்டப் பணிகளுடன் இந்த நிர்வாகப் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது. இந்தச் சுமையைக் குறைத்து, அவர்கள் சட்டப் பணிகளில் மட்டும் முழுக் கவனம் செலுத்தும் வகையில், அரசாணை எண் 164-இன்படி மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன.




இதையும் படிக்க : அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதல்வர் விஜய் உத்தரவு
இந்த மையங்கள் மூலம், குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை மாறும். சம்பந்தப்பட்ட பதிவு மாவட்டத்துக்குப் பொதுவான ஒரே இடத்தில் பதிவுச் சேவையைப் பெறலாம்.
தனியார் நிறுவனத்தின் பங்கு என்ன?
திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சேவை வழங்கும் நிறுவனம், ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்காணும் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும். மையங்களை அமைத்தல், தேவையான கணினி, தொழில்நுட்ப வசதிகள், உள்கட்டமைப்பு ஏற்படுத்துதல், அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்ய. பதிவுத் துறையின் ‘ஸ்டார்’ மென்பொருளுடனான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பணிகளை, ஏற்கெனவே அந்த மென்பொருளைப் பராமரித்து வரும் டிசிஎஸ் நிறுவனம் மேற்கொள்ளும்.
சேவை வழங்கும் நிறுவனம் வசதிகளைக் கவனித்தாலும், ஆவணப் பதிவுக்கான சட்டப்பூர்வ அதிகாரமும், பதிவை ஏற்று ஒப்புதல் வழங்கும் பொறுப்பும் பதிவுத் துறை அலுவலர்களிடம் மட்டுமே இருக்கும். பதிவுச் சட்டம் 1908, முத்திரைச் சட்டம் 1899, திருமணச் சட்டங்களுக்கு உட்பட்டு, சார்பதிவாளர்களே பதிவுகளை மேற்கொள்வார்கள். தற்போதுள்ள டோக்கன் முறையிலான நேரடிப் பதிவு, காகிதமில்லாப் பதிவு, நேரில் வராமலேயே செய்யும் பதிவு ஆகிய நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆவண எழுத்தர்களுக்கான நடைமுறையிலும் மாற்றம் இல்லை.
பணிநிலையப் பகுதி, பிரீமியம் ஓய்வறை, பொதுக் காத்திருப்புக் கூடம், சுயசேவைக் கணினிப் பிரிவு, குளிர்சாதன வசதி ஆகியவை இந்த மையங்களில் இடம்பெறும். டோக்கன் மற்றும் வரிசை மேலாண்மை மூலம், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை குறையும்.
இதையும் படிக்க : முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்வு!
முதற்கட்டமாக 5 மையங்கள்
2026–27 நிதியாண்டில், முதற்கட்டமாக ஐந்து மாதிரி பதிவு மையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- சென்னை வடக்கு பதிவு மாவட்டம்
- சென்னை மத்திய பதிவு மாவட்டம்
- சென்னை தெற்கு பதிவு மாவட்டம்
- செங்கல்பட்டு பதிவு மாவட்டம்
- கோவை வடக்கு பதிவு மாவட்டம்
இந்த ஐந்து மையங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, மாநிலத்தின் பிற பகுதிகளில் மேலும் 20 மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.