அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதல்வர் விஜய் உத்தரவு
TNPSC Age Limit Increased : தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், வயது வரம்பு காரணமாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, அக்டோபர் 30 : தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், வயது வரம்பு காரணமாக போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குரூப் 1 (TNPSC Group 1) தேர்வுகளுக்கு வயது வரம்பு 32ல் இருந்து 37 உயர்த்தப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு
இந்த வயது உச்சவரம்பு உயர்வு, அக்டோபர் 30, 2026 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான வயது உச்சவரம்பு அனைத்துப் பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு இதுவரை 32 ஆக இருந்த வயது உச்சவரம்பு, தற்போது 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37லிருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 42-லிருந்து 47 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 47-லிருந்து 52 ஆகவும் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : போடி தொகுதி ஓபிஎஸ் வெற்றிக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு, பொதுப் பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30லிருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்த வரம்பு 40லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தேர்வர்கர்களுக்கும் ஏற்கெனவே வயது உச்சவரம்பு இல்லை என்பதால், அவர்களுக்கு அதே நடைமுறை தொடர்கிறது.
குரூப் 4 பணிகளுக்கும் இதேபோல் வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வித் தகுதி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை என்ற நடைமுறை தொடர்கிறது. உயர்கல்வித் தகுதி இல்லாதவர்களுக்கு, பிரிவுவாரியாக உயர்த்தப்பட்ட வயது வரம்புகள் அரசாணையில் தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் கட்டண விவகாரம்.. தமிழிசை கண்டனம், அமைச்சர் விக்னேஷ் கொடுத்த விளக்கம்!!
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு கூடுதல் நன்மை
இந்த 5 ஆண்டு வயது உயர்வு, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி மற்றும் சீர்மரபினர், எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் வயதுச் சலுகையுடன் கூடுதலாக அமையும். கொரோனா காலகட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுகள் தாமதமானதால் வயது வரம்பைத் தாண்டும் நிலையில் இருந்த தேர்வர்கள், பணியில் இருந்தபடியே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த அறிவிப்பால் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் செய்யத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், மின்வாரியத்தில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.