காதலை கைவிட மறுத்த 14 வயது மகள்.. தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்.. விழுப்புரம் அருகே கொடூரம்!!
Father Arrested for Strangling Daughter: திண்டிவனம் அடுத்த வானூர் பகுதியில் காதல் விவகாரத்தில் தனது சொந்த மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரத் தந்தையைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டையில் படித்து வந்த மாணவி சக மாணவனைக் காதலித்ததால் ஆத்திரமடைந்து இந்த அதிர்ச்சிச் செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
விழுப்புரம், அக்.30: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் பிள்ளைகளால் ஏற்படும் மன உளைச்சல்களும், அதனால் சில இடங்களில் அரங்கேறும் அதிர்ச்சிகரமான குற்றச் செயல்களும் சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த வி. பரங்கனி கே.எஸ்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராத்திரி (ஓட்டுநர்). இவரது மனைவி விமலா. இவர்களுக்குச் சிவமகி மற்றும் விகாசினி (14) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகளான விகாசினி, தனது தாயின் சொந்த ஊரான ராணிப்பேட்டைப் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தபோது அங்குள்ள ஒரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் காதலாக மாறியதை அறிந்த பெற்றோர், அதனை வன்மையாகக் கண்டித்து அந்தச் சிறுமியைச் சொந்த ஊரான வானூருக்கு அழைத்து வந்து அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்த்துத் தொடர்ந்து படிக்க வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: சென்னையில் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளம் தாய் கைது.. காதலன் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!!
தந்தை தீட்டிய கோரத் திட்டம்:
பெற்றோர் எவ்வளவோ கண்டித்தும், ராணிப்பேட்டையில் உள்ள காதலனுடன் போன் மூலமாகத் தொடர்ந்து பேசுவதை விகாசினி கைவிடவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த தந்தை சிவராத்திரி, எப்படியாவது மகளின் இந்தத் தொடர்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தீவிரமாக யோசித்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் தாய் விமலா உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்காக வேலூருக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் சிவராத்திரியும் அவரது இரண்டு மகள்களும் மட்டுமே இருந்துள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தந்தை சிவராத்திரி, சதித் திட்டம் ஒன்றை அரங்கேற்றத் தொடங்கியுள்ளார். முதலில் தனது மூத்த மகளான சிவமகியைப் பார்த்து, “நீ உடனே பாட்டி வீட்டுக்குப் போ” என்று மிரட்டி வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார்; பயந்துபோன மூத்த மகளும் அங்கிருந்து பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மாணவி கழுத்து நெரித்துக் கொலை:
மூத்த மகள் வீட்டை விட்டுச் சென்ற பிறகு, வீட்டில் தனியாக இருந்த இளைய மகள் விகாசினி ஆழ்ந்த தூக்கத்திலிருந்த நேரத்தைத் தந்தை சிவராத்திரி பயன்படுத்திக் கொண்டுள்ளார். தூக்கத்தில் இருந்த அந்தச் சிறுமியின் மீது துணியைப் போர்த்தி, அருகில் கிடந்த கயிற்றைப் பயன்படுத்தி அவளது கழுத்தைச் பலமாக நெரித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். தன் கையைப் பற்றி வளர்த்து ஆளாக்க வேண்டிய தந்தையே எமனாக மாறித் தன் உயிரைப் பறிப்பதைப் அறியாமல் அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலையைச் செய்துக முடித்த பிறகு, எதையுமே அறியாதது போலத் தனது சகோதரரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சிவராத்திரி, “நான் என் பொண்ணைக் கொன்னுட்டேன், நீ உடனே வா” என்று கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதையும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. நள்ளிரவில் இரு முறை தட்டப்பட்ட கதவு.. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
காவல்துறையின் அதிரடி கைது:
சகோதரர் விரைந்து வந்து காரில் பார்த்தபோது விகாசினி மயங்கிய நிலையில் கிடப்பதாக நினைத்து அவரை மீட்டு உடனடியாக வானூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த வானூர் காவல் நிலையக் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளித் தந்தை சிவராத்திரியை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகளையே காதலைக் கைவிட மறுத்தாள் என்ற ஒரே காரணத்திற்காகத் தந்தை படுகொலை செய்த இந்தச் சோகச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழகம் முழுவதிலும் உள்ள பொதுமக்களைப் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.