கொலை மிரட்டல் வழக்கு.. வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜர் ..
சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கு சம்மந்தமாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேகர்பாபுவுக்கு வேப்பேரி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன் அடிப்படையில், இன்று காலை சேகர்பாபு வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
அக்டோபர் 30, 2026: வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், சுமார் ரூ.400 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
போலீசாரை மிரட்டிய சேகர் பாபு:
இதையடுத்து, அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் காத்திருந்தனர்.
மேலும் படிக்க: “சப்பாத்தி சாப்பிட்டு உடல் எடை குறைந்துவிட்டது; வீட்டுச் சாப்பாடு வேண்டும்!”.. நீதிபதியிடம் கோரிக்கை வைத்த அன்பில் மகேஷ்!
அந்த நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும், சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
கொலை மிரட்டல் வழக்கு:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல் விடுத்தல், காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: ஆந்திராவை நோக்கி நகரும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வட தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? பிரதீப் ஜான் சொல்வது என்ன?
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சேகர்பாபுவுக்கு வேப்பேரி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன் அடிப்படையில், இன்று காலை சேகர்பாபு வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
வேப்பேரி காவல் நிலையத்தில் ஆஜரான சேகர் பாபு:
காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்பட்ட வாக்குவாதம், அப்போது நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினர் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.