Tamil Nadu Weather Alert: வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு?
Tamil Nadu weather today : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 31, 2026 நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 30 : தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 31, 2026 நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அர்னாப் புயல் ஆந்திரத்தில் (Andhra Pradesh) கரையைக் கடந்த சில நாள்களிலேயே, புதிதா உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் ஆந்திர மாநில கடல் பகுதியை நோக்கியே நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அக்டோபர் 30, 2026 இன்று காலை 8.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில், அக்டோபர் 31, 2026 நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர், அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு – வடமேற்காக ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதையும் படிக்க : கொலை மிரட்டல் வழக்கு.. வேப்பேரி காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜர் ..




தமிழகத்தில் மழை எப்படி?
இதனையடுத்து அக்டோபர் 30, 2026 இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தெற்குக் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை. பிற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும் என்றும் அக்டோபர் 31, 2026 மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 1, 2026 வடக்கு கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 2ல் கனமழைக்கு வாய்ப்பு
மேலும் நவம்பர் 2, 2026 நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 2, 3, 2026 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மின்வெட்டு விவகாரம்.. இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!!
கனமழை எச்சரிக்கையில் மாற்றம்
முன்னதாக, நவம்பர் 3, 2026 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய அறிக்கையில், அந்த நாளுக்கு வடதமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.