AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை… சோப்ளாங்கி அரசு!” – விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

MK Stalin Slams TVK Government: அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், ரேஷன் அரிசி விநியோகத்தில் முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகம் பணவீக்கம் குறைவாக இருந்த மாநிலமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

“சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை… சோப்ளாங்கி அரசு!” – விஜய் அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Oct 2026 10:48 AM IST

அக்டோபர் 30, 2026: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், விஜய் தலைமையிலான அரசை ‘சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை… சோப்ளாங்கி அரசு’ என விமர்சித்துள்ளார்.

திமுக மகளிர் அணி சார்பாக நாளை ஆர்ப்பாட்டம்:

அந்த வீடியோவில் பேசியுள்ள மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ‘நல்லா இருக்கீங்களா?’ என்று யாராவது கேட்டால், ‘என்னைக் கிண்டல் செய்கிறீர்களா?’ என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து அக்டோபர் 31ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்குப் பாதுகாப்பின்மை, போதைப்பொருள் புழக்கம் குறித்து விஜய் தொடர்ந்து பேசியதாகவும், ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வசாதரணமாக நடக்கும் கொலைகள்:


வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து நகைக் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போவதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையின் மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள்கூட கொலை செய்யப்படும் சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி சிறைச்சாலையில் ஒரே நாளில் 17 குற்றவாளிகள் பிரதான வாயில் வழியாகத் தப்பிச் சென்ற சம்பவத்தையும் குறிப்பிட்ட அவர், இத்தகைய சம்பவங்கள் முதலமைச்சரின் கவனத்திற்குச் செல்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். குற்றவாளிகளுக்குத் தமிழக அரசு மீது எந்த அச்சமும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

அரசிடமிருந்து தான் பெண்களை பாதுக்காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியதுடன், சட்டம் ஒழுங்கைச் சீரமைக்க முதலமைச்சர் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை; தனது கட்சிக்குள் நடவடிக்கை எடுத்தாலே போதும் என்றும் தெரிவித்துள்ளார். பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அரசிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத அரசு

இதுதவிர, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், ரேஷன் அரிசி விநியோகத்தில் முறைகேடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் தமிழகம் பணவீக்கம் குறைவாக இருந்த மாநிலமாகத் திகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழும்போது, அவற்றை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: மது பிரியர்களுக்கு ஷாக்! டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ. 10 உயர்வு.. நவ.1 முதல் அமல்..

தூங்கிக்கொண்டிருக்கும் அரசை தட்டி எழுப்புவோம்

மேலும், ‘அண்ணனாக இருப்பேன், மாமாவாக இருப்பேன், சித்தப்பா, பெரியப்பாவாக இருப்பேன்’ என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய விஜய் முதலில் முதலமைச்சராகத் தனது கடமையைச் சரியாகச் செய்யட்டும் என்றும் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது அனைத்துத் துறைகளிலும் தற்போதைய அரசு பின்னோக்கிச் செல்வதாகக் குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தூங்கிக் கொண்டிருக்கும் ஆட்சி நிர்வாகத்தையும் முதலமைச்சரையும் தட்டி எழுப்பும் முயற்சியாகப் போராட்டம் நடைபெறும் என்றும், ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us