இந்தியவில் குழந்தைகளுக்கு மத்தியில் அதிகரிக்கும் எலும்பு பலவீனம்! 40% அதிகரித்த பாதிப்புகள் – பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
Skeletal Crisis Among Children: தற்போதைய தலைமுறை குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை வீடுகளிலும் வகுப்பறைகளிலும் செலவிடுவதால், அவர்களின் எலும்புகளுக்குத் தேவையான வலிமை முழுமையாக உருவாகாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை மருத்துவர்கள் 'Skeletal Crisis' எனக் குறிப்பிடுகின்றனர். இது குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 30, 2026: இந்தியாவில் குழந்தைகளிடையே எலும்பு மற்றும் தசை தொடர்பான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, செல்போன், தொலைக்காட்சி உள்ளிட்ட திரை சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, சத்தான உணவுகளை உட்கொள்ளாதது மற்றும் சூரிய ஒளியில் விளையாடுவதைக் குறைத்துக் கொண்டது போன்ற காரணங்களால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் ஸ்கெலிடல் கிரைசிஸ்:
குழந்தைப் பருவம் மற்றும் வளரிளம் பருவத்தில்தான் வாழ்நாள் முழுவதும் தேவையான எலும்பு வலிமையின் பெரும்பகுதி உருவாகிறது. ஆனால், தற்போதைய தலைமுறை குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை வீடுகளிலும் வகுப்பறைகளிலும் செலவிடுவதால், அவர்களின் எலும்புகளுக்குத் தேவையான வலிமை முழுமையாக உருவாகாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை மருத்துவர்கள் ‘Skeletal Crisis’ எனக் குறிப்பிடுகின்றனர். இந்திய பிசியோதெரபி சங்கத்தின் (IAP) நிபுணர்கள், பள்ளிக் குழந்தைகளிடையே எலும்பு மற்றும் தசை சார்ந்த பிரச்சினைகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவ் கே. ஜா கூறுகையில், முதுகுவலி என்பது முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சினை அல்ல என்றும், பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு உடல் இயக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
எலும்பு வலிமைக்கு என்ன உணவுகள் அவசியம்?
குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதச்சத்து மிகவும் அவசியம். பால், தயிர், பனீர், கேழ்வரகு போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளையும், முட்டை, பருப்பு வகைகள், பயறு மற்றும் கொட்டைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், சூரிய ஒளி உடலில் இயற்கையாக வைட்டமின் டி உற்பத்தியாவதற்கு உதவுகிறது. இது உணவில் உள்ள கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், குழந்தைகளுக்குத் தேவையான சூரிய ஒளி வெளிப்பாட்டின் அளவு தோலின் நிறம், பருவநிலை மற்றும் நேரத்தைப் பொறுத்து மாறுபடும். வைட்டமின் டி குறைபாடு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: படுக்கைக்கு அடியில் படியும் தூசி; தரையில் தங்கும் முடிகள்! அலட்சியம் காட்டும் இந்தியர்கள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..
தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம்!
6 முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, வாரத்தில் மூன்று நாட்களாவது எலும்புகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கயிறு தாண்டுதல், ஓடுதல், குதித்தல், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்!
குழந்தைகளுக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவது, தொடர்ந்து எலும்பு அல்லது மூட்டு வலி இருப்பது, வயதுக்கு ஏற்ப உடல் வளர்ச்சி இல்லாதது, தசை பலவீனம், நடப்பதில் சிரமம் போன்றவை எலும்பு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
குறிப்பாக, சிறிய அளவில் கீழே விழுந்தால்கூட எலும்பு முறிவு ஏற்படுவது, கால்கள் வளைந்து காணப்படுவது, மணிக்கட்டுப் பகுதிகளில் வீக்கம் ஏற்படுவது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
மேலும் படிக்க: 543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 90% வரை விலை சரிவு – நவம்பர் 9 முதல் அமல்!
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குழந்தைகளின் வளர்ச்சி, உணவுப் பழக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளைப் பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றுக்கான ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பொதுவாக எலும்பு அடர்த்திப் பரிசோதனை அவசியமில்லை. ஆனால், அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுபவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் அடிப்படையில் பரிசோதனை செய்யலாம்.
குழந்தைப் பருவத்திலேயே உணவு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எலும்பு பாதிப்புகளைத் தவிர்க்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.