‘சூப்பர் எல்நினோ’ கோரத்தாண்டவம்.. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 55,000 பேர் உயிரிழக்கலாம்.. நடக்கப்போகும் விபரீதம்!!
Super El Nino Threat: சூப்பர் எல்நினோ தாக்கத்தால் வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் சுமார் 55,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதீத வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், 30: புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களின் காரணமாக உலக நாடுகள் பல்வேறு இயற்கை இடர்பாடுகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது பசிபிக் பெருங்கடலில் நிகழும் இயற்கைக் கோளாறுகள் விஞ்ஞானிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை திடீரென அதிகரித்துள்ளதன் விளைவாக, இந்த ஆண்டு ‘சூப்பர் எல்நினோ’ (Super El Nino) நிகழ்வு தீவிரமடைந்துள்ளது. இந்த வளிமண்டல மற்றும் கடல்சார் மாற்றங்களால் உலகின் பல்வேறு பகுதிகளில் கோடைகால வறட்சி, கடுமையான வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ சம்பவங்கள் மற்றும் உணவுச் சங்கிலியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தீவிர வானிலை மாற்றங்களின் கோரப்பிடியில் சிக்கி மனித உயிர்களும் பெருமளவில் பறிபோகலாம் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன.
இதையும் படிக்க: 543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 90% வரை விலை சரிவு – நவம்பர் 9 முதல் அமல்!
அதிர்ச்சி தரும் உயிரிழப்பு கணிப்புகள்:
சர்வதேச அளவில் காலநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் ‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ அமைப்பு தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை உலக நாடுகளை உலுக்கியுள்ளது. கடந்த மாதம் வெளியான ஆய்வுகளில் எல்நினோ தாக்கத்தால் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான கணிப்புகளின்படி அடுத்த ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் கூடுதலாக 3 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத வெப்ப அலைகள், வறட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதாரக் கேடுகள் காரணமாக உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளே இந்த உயிரிழப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
55,000 பேர் வரை உயிரிழக்கக் கூடும்:
வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, சூப்பர் எல்நினோ தாக்கத்தால் உலக அளவில் நைஜீரியா நாடு முதலிடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியா இரண்டாவது பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் நிலவக்கூடிய அதீத வெப்பம் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக மட்டும் சுமார் 55,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நைஜீரியாவில் 56,000 பேரும், இந்தோனேசியாவில் 29,000 பேரும், பிரேசிலில் 19,000 பேரும் உயிரிழக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆரம்பக் கட்டமாக இந்தியாவின் பல பகுதிகளில் குறிப்பாக மும்பை போன்ற பெருநகரங்களில் கடுமையான காற்று மாசு மற்றும் வெப்ப அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார் பரிசு! மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!
உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை:
கடந்த 1950-ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாகியுள்ள மிக வலுவான எல்நினோ பாதிப்பு இதுவாகத் தான் இருக்கும் என ஏற்கனவே உலக வானிலை அமைப்பு (WMO) தீவிர எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த மரணக் கணிப்புகள் அரசுகளையும் பொதுமக்களையும் மேலும் ஒருமுறை சிந்திக்க வைத்துள்ளன. காலநிலை மாற்றத்தைத் தூண்டும் காரணிகளைக் கட்டுப்படுத்துவது, பசுமைப் பரப்பை அதிகரிப்பது மற்றும் தீவிர வெப்ப அலைகளை எதிர்கொள்ளத் தேவையான அவசரகால மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். மனித குலத்திற்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கோடிக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.