543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 90% வரை விலை சரிவு – நவம்பர் 9 முதல் அமல்!
Cancer Medicine Price Reduced: பொதுப்பெயர் (Generic) மருந்துகள் மற்றும் பயோசிமிலர் (Biosimilar) மருந்துகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், MSD Pharma நிறுவனத்தின் பிரபலமான நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தான கீட்ரூடா (Keytruda) உள்ளிட்ட சில விலையுயர்ந்த மருந்துகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அக்டோபர் 30, 2026: புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 543 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அதிரடியாகக் குறைத்துள்ளது. இதில் சில மருந்துகளின் விலை 90 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்குவதில் நோயாளிகளுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புற்றுநோய் சிகிச்சை – மருந்துகளின் விலை அதிரடியாக குறைப்பு:
குறிப்பாக, பொதுப்பெயர் (Generic) மருந்துகள் மற்றும் பயோசிமிலர் (Biosimilar) மருந்துகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், MSD Pharma நிறுவனத்தின் பிரபலமான நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்தான கீட்ரூடா (Keytruda) உள்ளிட்ட சில விலையுயர்ந்த மருந்துகளின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்த வகையில், மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Palbociclib மருந்தின் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் விலை ரூ.40,421-ல் இருந்து ரூ.2,270 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Samarth Life Sciences நிறுவனம் தயாரிக்கும் கீமோதெரபி மருந்தான Thiotepa-வின் 100 மில்லிகிராம் குப்பியின் விலை ரூ.80,072-ல் இருந்து ரூ.7,150 ஆக அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார் பரிசு! மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்!
இதுதவிர, பல்வேறு வகையான புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Dasatinib, Lenvatinib, Abiraterone மற்றும் Olaparib ஆகிய மருந்துகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான Ribociclib மருந்தின் விலை ரூ.24,435 ஆகத் தொடர்கிறது. Tagrisso, Tecentriq, Darzalex, Imfinzi உள்ளிட்ட சில முக்கிய மருந்துகளின் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
நவம்பர் 9ஆம் தேதி முதல் புதிய விலை அமல்!
இந்த புதிய விலைகள் நவம்பர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, பொதுமக்கள் நலன் கருதி 137 வகையான விலை நிர்ணயம் செய்யப்படாத புற்றுநோய் மருந்துகளுக்கு அதிகபட்ச வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிக்கும் முடிவை NPPA அறிவித்திருந்தது. உச்ச நீதிமன்றமும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் அதிக விலை மற்றும் விநியோகச் சங்கிலியில் வசூலிக்கப்படும் லாப வரம்புகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கிடையில், மருந்துகளின் விலையைக் குறைத்தாலும் பல விலையுயர்ந்த மருந்துகள் தொடர்ந்து சாமானிய மக்களின் எட்டாக்கனியாகவே இருப்பதாக அகில இந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ். சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், 2013ஆம் ஆண்டின் மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையின்படி (DPCO) எளிய சராசரி கணக்கீட்டு முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், 1995ஆம் ஆண்டின் DPCO அடிப்படையிலான உற்பத்திச் செலவு சார்ந்த கணக்கீட்டு முறையைப் பின்பற்றினால் மட்டுமே மருந்துகளின் விலையை உண்மையாகக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: படுக்கைக்கு அடியில் படியும் தூசி; தரையில் தங்கும் முடிகள்! அலட்சியம் காட்டும் இந்தியர்கள்.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..
அக்டோபர் 27ஆம் தேதி வரை மருந்து நிறுவனங்கள் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் இந்த விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் திருத்தப்பட்ட விலைகளைச் சமர்ப்பிக்கும் போதெல்லாம் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என NPPA தெரிவித்துள்ளது.