எரிமலை சாம்பலில் முட்டையிட்டு அடைகாக்கும் விசித்திர பறவை…
Megapode birds: மெகாபோட் பறவைகள் தங்களின் உடல் வெப்பத்தைப் பயன்படுத்தாமல் எரிமலைச் சாம்பலின் இயற்கை வெப்ப ஆற்றலைக் கொண்டு முட்டைகளை அடைகாக்கும் விசித்திரமான பழக்கம் கொண்டவை. பெண் பறவை 3 முதல் 4 அடி ஆழ குழியில் முட்டையிட்டு சாம்பலால் மூடிவிட்டுச் சென்றுவிட, சாம்பலின் வெப்பமே ஒரு இயற்கை இன்குபேட்டர் போல செயல்படுகிறது.
உலகில் உள்ள பெரும்பாலான பறவைகள் உடலால் அடைகாக்கும் நிலையில் மெகாபோட் பறவைகள் எரிமலை சாம்பலின் வெப்பத்தைப் பயன்படுத்தி குஞ்சு பொரிக்கின்றன. கிரேக்க மொழியில் ‘பெரிய கால்கள்’ என்று அழைக்கப்படும் இவை ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் அந்தமான் தீவுகளில் வாழ்கின்றன. முட்டையிடும் காலத்தில் புவிவெப்ப ஆற்றல் நிறைந்த அல்லது செயல்படும் எரிமலைப் பகுதிகளுக்கு இவை பல மைல்கள் பயணிக்கின்றன. தங்களின் வலிமையான கால்களால் சாம்பலில் சுமார் 3 முதல் 4 அடி ஆழத்தில் பெரிய குழிகளைத் தோண்டுகின்றன. அடைகாப்பதற்கு தேவையான சரியான வெப்பநிலையைத் தங்களின் அலகு மற்றும் தொண்டையின் மூலம் துல்லியமாகக் கண்டறிகின்றன. குழியில் முட்டையிட்ட பிறகு அதை சாம்பலால் மூடிவிட்டு பெண் பறவை அங்கிருந்து மீண்டும் வராமல் சென்றுவிடுகிறது.
எரிமலை சாம்பலில் முட்டையிடும் விசித்திர பறவை ‘மெகாபோட்’
உலகில் உள்ள பெரும்பாலான பறவைகள் தாங்கள் இடும் முட்டைகளை தங்களின் உடல் வெப்பம் மூலம் அடைகாத்து குஞ்சு பொரிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், எரிமலைகளில் இருந்து வெளிவரும் சுடு சாம்பல் மற்றும் புவிவெப்ப ஆற்றலை பயன்படுத்தி முட்டைகளை அடைகாக்கும் விசித்திரமான ‘மெகாபோட்’ (Megapode) பறவைகள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
பெரிய கால்கள் கொண்ட பறவை
கிரேக்க மொழியில் மெகாபோட் என்றால் ‘பெரிய கால்கள்’ என்று பொருளாகும். கோழி வடிவத்தில் இருக்கும் இந்த பறவைகள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா மற்றும் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காணப்படுகின்றன. இவை தங்களின் பலமான கால்களால் பெரிய குழிகளை தோண்டுவதில் வல்லவை என்பதால் இப்பெயர் பெற்றுள்ளன.
இயற்கை ‘இன்குபேட்டர்’ தொழில்நுட்பம்
முட்டையிடும் காலம் வந்தவுடன் இந்த பறவைகள் மைல் கணக்கில் பயணித்து, செயல்படும் எரிமலைகளுக்கு அருகிலோ அல்லது புவிவெப்ப நீரூற்றுகள் உள்ள பகுதிகளுக்கோ செல்கின்றன.
4 அடி ஆழ புதைக்குழி
எரிமலை சாம்பல் எப்போதுமே வெதுவெதுப்பாக இருக்கும் என்பதால், அங்கு தன் கால்களால் சுமார் 3 முதல் 4 அடி ஆழத்திற்கு பெரிய குழி ஒன்றை தோண்டுகிறது. முட்டைகள் பொரிப்பதற்கு தேவையான துல்லியமான வெப்பநிலையை (சுமார் 33°C) இப்பறவைகள் தங்களின் அலகு மற்றும் தொண்டை மூலமாக உணர்கின்றன.
முட்டையிட்டு எஸ்கேப்
வெப்பநிலை சரியாக இருக்கும் பட்சத்தில், பெண் பறவை குழியின் உள்ளே முட்டையிட்டு, மீண்டும் அதை சாம்பலால் மூடிவிட்டு அங்கிருந்து நிரந்தரமாக பறந்து சென்றுவிடுகிறது. அதன்பின்னர், எரிமலை சாம்பலின் வெப்பமே ஒரு இயற்கை ‘இன்குபேட்டர்’ போல செயல்பட்டு முட்டையை தானாகவே அடைகாக்குகிறது.
பெற்றோரை பார்க்காத குஞ்சுகள்
சுமார் 60 முதல் 80 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள், தங்களுக்கு மேலே இருக்கும் 4 அடி ஆழ சாம்பலை தாங்களாகவே தோண்டி மேலே வர வேண்டும். இந்த குஞ்சுகள் பிறக்கும் போதே முழுமையான சிறகுகளுடன் பிறக்கின்றன. இதனால் சாம்பலிலிருந்து வெளியே வந்த முதல் நாளே ஓடவும், உணவை தேடவும், பறக்கவும் கூடிய அசாத்திய திறனை பெற்றிருக்கின்றன.