ரசீது, எண்ணெய் விவரங்கள் முக்கியம்… – தீபாவளி இனிப்பு, கார வகைகளை தயாரிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள்
Diwali Chennai Food Safety: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி வெளியிட்டுள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 30 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கான உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை, சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி வெளியிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை (Diwali) காலத்தில் பொதுமக்களுக்குத் தரமான, பாதுகாப்பான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தீபாவளி இனிப்பு, கார வகைகளை தயாரிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகளில் ஒன்று தீபாவளி. புத்தாடை, பட்டாசுகளுடன் சேர்த்து இனிப்பு பலகாரங்களும் ஒவ்வொரு வீடுகளிலும் தவறாமல் இடம் பெறும். வீடுகளில் செய்ய முடியாதவர்கள் கடைகளில் சென்று வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி கடைகளில் விற்கப்படும் இனிப்பு கார வகைகளை தரமானதாக தயாரிப்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வழி காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க : முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாக உயர்வு!




இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இனிப்பு, கார வகைகளைத் தயாரிக்கும் அனைத்து வணிகர்களும், உணவுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து உரிய உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றும் பண்டிகைக் காலத்தில் மட்டும் தற்காலிக இடங்களில் பலகாரம் தயாரித்து விற்பனை செய்வோரும், முறையாகப் பதிவு செய்த பிறகே விற்பனையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பில் கவனிக்க வேண்டியவை
- உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- தயாரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் உள்ளவர்கள், கையுறையும் தலையில் மறைப்பும் கட்டாயம் அணிய வேண்டும்.
- சமையலுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
- அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை மட்டுமே, உரிய அளவுக்குள் பயன்படுத்த வேண்டும்.
- ஈக்கள், பூச்சிகள், கிருமித்தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மட்டுமே உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனையின் போது கடைபிடிக்க வேண்டியவை
பலகாரங்கள் தயாரிக்கப் பயன்படுத்திய எண்ணெய், நெய் குறித்த விவரங்களைக் கடையில் தகவல் பலகையாக வைக்க வேண்டும் என்றும் விற்பனை செய்யப்படும் இனிப்புப் பெட்டிகள், பொட்டலங்களில் தயாரிப்புத் தேதி, காலாவதித் தேதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : சென்னை ரயிலில் நள்ளிரவில் டமார் சத்தம்.. நெருப்பு பொறியுடன் வெடித்து சிதறிய பவர் பேங்க்.. அலறியடித்த பயணிகள்!
புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்
சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் பொதுமக்களுக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இனிப்பு, கார வகைகளை வாங்கும்போது, பொதுமக்கள் கடைகளில் முறையான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பொட்டலங்களில் தயாரிப்புத் தேதி, காலாவதித் தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து வாங்குவது நல்லது. உணவுப் பொருள்களின் தரம் குறித்து ஏதேனும் புகார் இருந்தால், பொதுமக்கள் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்குப் புகார் அனுப்பலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.